கழிப்பறைகள் அமைப்பதில் அலட்சியம் – கர்நாடக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் மக்கள் அடர்த்தி அதிகரித்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் மக்கள் வசதிக்காக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை பெங்களூரு மாநகராட்சி நிர்வகித்து வருகிறது. ஆனால் பெங்களூருவில் உள்ள பொது கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாக கூறி தனியார் நிறுவனம் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கடந்த வழக்கு விசாரணையின்போது, பெங்களூருவில் உள்ள பொது கழிப்பறைகளின் நிலை குறித்து ஆய்வு நடத்தவும், அதுதொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கவும உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் மாநகராட்சி சார்பில் அறிக்கை ஏதும் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் அந்த மனு மீது நேற்று மீண்டும் விசாரணை நடந்தது.
நீதிபதிகள் பிரசன்னா, கிருஷ்ணா எஸ் தீக்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டனர். பின்னர் கூறுகையில், பெங்களூருவில் உள்ள பொது கழிப்பறைகளை மாநகராட்சி நிர்வகிக்க தவறிவிட்டது. இதுதொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
மேலும் பெங்களூரு போன்ற பெருநகரில் மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய அளவு பொது கழிப்பறைகளை கட்ட மாநகராட்சி தவறிவிட்டது. மேலும் பொது கழிப்பறை விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க நகர்ப்புற மேம்பாட்டு துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.