குஜராத் ராஜ்கோட் நகரில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தீவிர பிரசாரம்
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக ஆம் ஆத்மி கட்சி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மாலை குஜராத் சென்றடைந்தார். இந்நிலையில், ராஜ்கோட் நகரில் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதற்கு முன்பாக, குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் பிரார்த்தனை செய்ய இருக்கிறார்.
கடந்த ஜூலை 3-ம் தேதி அன்று அகமதாபாத் மற்றும் சூரத் ஆகிய இடங்களுக்குச் சென்று மக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதத்திற்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், குஜராத்தில் காங்கிரஸை விட ஆம் ஆத்மியின் தொழிலாளர் தளம் பெரிதாக வளர்ந்துள்ளதாக கெஜ்ரிவால் கூறினார். இந்நிலையில், மாநிலத்தில் மொத்தமுள்ள 182 சட்டசபைத் தொகுதிகளில் சுமார் 50 இடங்களைக் கொண்ட சௌராஷ்டிரா தொகுதியில் கெஜ்ரிவால் கவனம் செலுத்துகிறார்.