குடியுரிமை சட்ட திருத்ததுக்கு எதிராக போராட்டம் – தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களும், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 நாட்களாக நீடித்த இந்த போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று மாணவர்களை சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
சென்னையை போன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் மெரினா கடற்கரையில் போலீசார் மிகுந்த கண்காணிப்புடன் உள்ளனர்.
கடற்கரையில் வெளிமாநில மாணவர்கள் குவிந்தால் அவர்கள் பற்றி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மெரினாவில் சில நாட்களுக்கு முன்பு அசாம் வாலிபர்கள் சிலர் திடீரென திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள அசாம் மாநிலத்தவர்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
சென்னையில் இந்து முன்னணி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வீட்டுக்கும், அவருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் நாசவேலைக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதால் அங்கு கூடுதல் கவனம் செலுத்த போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் சென்னை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மற்ற கல்லூரிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மாணவர்கள் போராட்டத்தின் பின்னணியில் யாரும் உள்ளார்களா? என்பது பற்றியும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வட மாநிலங்களை போல அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்பதில் போலீசார் மிகவும் உஷாருடன் இருக்கிறார்கள்.