கேள்வியால் நிருபரின் வாயை அடைத்த டாப்ஸி!
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.
சர்வதேச திரைப்பட விழாவில் நடைபெற்ற, பொது அமர்வில் டாப்சி கலந்து கொண்டார். பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளித்து வந்த டாப்சியிடம் இந்தியில் பேசுமாறு ஒரு நிருபர் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த டாப்சி ரசிகர்களை பார்த்து இங்கு இருப்பவர்கள் அனைவருக்கும் இந்தி தெரியுமா? என கேட்டார். அதற்கு பெரும்பாலானோர் இல்லை என்று கூறினர்.
அதனை புரிந்து கொள்ளாத அந்த நிருபர் நீங்கள் பாலிவுட் நடிகை எனவே இந்தியில் தான் பேச வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இதனால் பொறுமை இழந்த டாப்சி, நான் இந்தியில் மட்டும் நடிக்கவில்லை தமிழ், தெலுங்கிலும் நடித்து வருகிறேன், எனவே தமிழில் பேசவா என எதிர் கேள்வி எழுப்பினார். டாப்சியின் இந்த பதிலுக்கு அங்கு இருந்தவர்கள் ஆரவார குரல் எழுப்ப அந்த நிருபர் ஏதும் பேசாமல் அமர்ந்தார். தன்னை இந்தியில் பேச வற்புறுத்திய நிருபரை நடிகை டாப்சி ஒற்றை கேள்வியால் வாயடைக்க செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.