Tamilசெய்திகள்

சகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நடைபெற்றது

இந்திய கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதை தடுக்கும் பொருட்டு கடலோர கிராமங்களில் அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக நடக்கிறதா? என்பதை பரிசோதிக்கும் வகையில், இந்திய கடலோர காவல் படையினர், தமிழக மரைன் போலீசார் மற்றும் மாநில போலீசார் இணைந்து சாகர் கவாச் (கடல்கவசம்) பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ‘சாகர் கவாச் ஆப்ரேஷன்’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தமிழகத்தின் கடலோர பகுதியில் இன்று தொடங்கியது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ‘சாகர் கவாச் ஆப்ரேஷன்’ பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது.

அதன்படி, ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி.சுரேஷ் தலைமையில் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து படகு மூலம் கடலுக்கு சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலுக்கு செல்லும் வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரையும் கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து வந்தனர். இந்த பாதுகாப்பு ஒத்திகயைானது இன்றும், நாளையும் (2 நாட்கள்) கடலோர பகுதிகளில் நடைபெற உள்ளது.