Tamilசெய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி கூட்டணி கட்சிகளுடன் கூட்டம் நடத்தும் காங்கிரஸ் – கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை காங்கிரஸ் ஆதரிக்கிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகளுடன் கூட்டம் நடத்துகிறது. இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உயர் வகுப்பினருக்கு மட்டுமே கிடைத்து வந்த நிலையில் எல்லா தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று சுதந்திரத்துக்கு முன்பே காந்தி வலியுறுத்தினார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பெருந்தலைவர் காமராஜர், பெரியார் ஆகியோர் இதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார்கள். இது பற்றி அப்போதைய பிரதமர் நேருவிடமும் வலியுறுத்தினார்கள்.

நியாயத்தை உணர்ந்த நேருவும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால் அதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் தேவைப்பட்டது. அந்த சட்ட திருத்தத்தை நேரு கொண்டு வந்தார். இதுவே இந்திய அரசியல் சட்டத்தில் நடந்த முதல் திருத்தம். ஆனால் சாதி வாரியாக சரியான கணக்குகள் இல்லை. எனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. இது நடத்தப்பட்டால் ஒவ்வொரு சமூகத்துக்கும் ஏற்ப கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சரியான இட ஒதுக்கீடு கிடைக்கும். எந்த சமூகத்துக்கும் பாரபட்சம் இருக்காது.

இதை வலியுறுத்தி மற்ற கட்சிகளையும் இணைத்து ஒரு கூட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் ஓ.பி.சி. அணியின் தலைவர் டி.ஏ.நவீன் ஏற்பாடு செய்து வருகிறார். இந்த கூட்டம் வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை)ஸ்ரீ காமராஜர் அரங்கில் நடக்கிறது. கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.