சராசரியில் பிராட்மேனை முந்திய ரோகித் சர்மா!
இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா இந்த தொடரில் இதுவரை 529 ரன்கள் குவித்துள்ளார். வினோ மன்கட், புதி குன்ட்ரன், சுனில் கவாஸ்கர் (5 முறை), ஷேவாக் ஆகியோருக்கு பிறகு டெஸ்ட் தொடர் ஒன்றில் 500 ரன்களுக்கு மேல் சேர்த்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆவார். இந்த வகையில் கடைசியாக ஷேவாக் 2005-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் மொத்தம் 544 ரன்கள் எடுத்திருந்தார்.
முதலாவது டெஸ்டில் மயங்க் அகர்வாலும் (215 ரன்), 2-வது டெஸ்டில் விராட் கோலியும் (254 ரன்), 3-வது டெஸ்டில் ரோகித் சர்மாவும் (212 ரன்) இரட்டை சதம் அடித்து உள்ளனர். ஒரு டெஸ்ட் தொடரில் மூன்று இந்திய வீரர்கள் இரட்டை சதம் அடித்திருப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.
உள்நாட்டில் ரோகித் சர்மா இதுவரை 6 சதம், 5 அரைசதம் உள்பட 18 இன்னிங்சில் ஆடி 1,298 ரன்கள் (சராசரி 99.84) எடுத்துள்ளார். உள்ளூரில் குறைந்தது 10 இன்னிங்ஸ் விளையாடிய வீரர்களில் சிறந்த சராசரியை ரோகித் சர்மா பெற்றிருக்கிறார். இந்த சாதனை பட்டியலில் அவர் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை (சராசரி 98.22) பின்னுக்கு தள்ளி அவரது 71 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
* இந்த தொடரில் இந்தியா இதுவரை 47 சிக்சர்கள் (விசாகப்பட்டினம்-27 சிக்சர், புனே-7, ராஞ்சி-13) நொறுக்கியுள்ளது. இதன் மூலம் ஒரு தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதில் ரோகித் சர்மாவின் பங்களிப்பு மட்டும் 19 சிக்சர் ஆகும். இதற்கு முன்பு 2013-14-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 40 சிக்சர் கிளப்பியதே அதிகபட்சமாக இருந்தது.
* டெஸ்ட், ஒரு நாள் போட்டி இரண்டிலும் இரட்டை சதம் அடித்தவர்களின் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர், ஷேவாக் (இருவரும் இந்தியா), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோருடன் இப்போது ரோகித் சர்மாவும் இணைந்துள்ளார்.