சர்ச்சை பேச்சு குறித்து விளக்கம் அளித்த ராகவா லாரன்ஸ்!
தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் கமல் போஸ்டரில் சாணி அடித்தது பற்றி நடிகர் லாரன்ஸ் பேசியது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கமல் பட போஸ்டரின் மீது சாணி அடித்தது பற்றி பேசியதை சிலர் மிகைப்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அதி தீவிர ரஜினி ரசிகனாக இருந்த போது சிறுவயதில் தன்னை அறியாமல் கமலுக்கு எதிராக அந்த காரியத்தை செய்ததாகவும் லாரன்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
கமல் மீது அதிக மரியாதை உள்ளது என்றும், தான் பேசியது தவறு என நினைத்தால் யாரிடம் வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தர்பார் இசை வெளியீட்டு விழாவில், பேசியதை முழுமையாக கேட்டால் உண்மை புரியும் எனவும் அதில் கமலை பற்றி தவறாக ஏதும் பேசவில்லை என்றும் நடிகர் லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.