சென்னையில் ஆசிய ஆக்கி போட்டி – பாகிஸ்தான், சீனா அணிகள் பங்கேற்பு
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வரும் ஆகஸ்டு 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆக்கி போட்டி நடக்கிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஆக்கி போட்டி அரங்கேறுகிறது.
இந்த போட்டிக்காக மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் புதுப்பிக்கப்படுகிறது. சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இதில் இந்தியாவுடனான உறவு சீராக இல்லாததால் பாகிஸ்தான், சீனா அணிகள் இந்த போட்டியில் பங்கேற்குமா? என்பதில் சந்தேகம் நிலவியது. ஆனால் பாகிஸ்தான், சீனா அணிகள் ஆசிய ஆக்கி போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்து இருப்பதாக ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று தெரிவித்தது.