சென்னை அரும்பாக்கத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உருக்க முயற்சி – கூடுதல் போலீஸ் கமிஷனர் அன்பு பரபரப்பு தகவல்
சென்னை அரும்பாக்கத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை குரோம்பேட்டையில் உள்ள லாட்ஜில் வைத்து உருக்க முயற்சி நடந்திருப்பதாக கூடுதல் போலீஸ் கமிஷனர் அன்பு பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து கூடுதல் போலீஸ் கமிஷனர் அன்பு நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் அமல்ராஜூடன் வேறு போலீசார் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா?
பதில்:- வேறு போலீசாருக்கு தொடர்பு இல்லை. அமல்ராஜூக்கு மட்டும் இந்த கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரியும். அவர் போலீஸ்துறைக்கு தகவல் எதுவும் சொல்லாமல் திருட்டு நகைகளை வீட்டில் வைத்திருந்தது குற்றம் ஆகும். விசாரணையில் தகவல் தெரிந்தவுடன் தான் அமல்ராஜ் நகைகளை ஒப்படைத்தார்.
கேள்வி:- இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் ஏற்கனவே இதற்கு முன்பு இது போன்ற கொள்ளை சம்பவங்களில் உறுதுணையாக இருந்திருக்கிறாரா?
பதில்:- அவருடைய சர்வீஸ் ரெக்கார்டில் எந்தவொரு குற்றச்சாட்டும் பதிவாகவில்லை. கேள்வி:- இன்ஸ்பெக்டர் அமல்ராஜிடம் எப்படி நகைகள் மீட்கப்பட்டது? பதில்:- சந்தோஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் யார்-யாரிடம் பேசி இருந்தார். எங்கே சென்றிருந்தார் என்பதை ஆராய்ந்த போது, அச்சிரப்பாக்கம் சென்றிருப்பது தெரிய வந்தது. அவர் ஏன் சென்றார் என்பது குறித்து மேலும் விசாரணை நடத்திய போது, அமல்ராஜின் மனைவியும், சந்தோஷின் மனைவியும் உறவினர்கள் என்பது தெரியவந்தது. எனவே அமல்ராஜை விசாரணைக்கு அழைத்தோம். அவர் நகையை ஒப்படைத்தார். பின்னர் அவரது உறவினர் வீட்டில் இருந்த மற்ற நகைகள் மீட்கப்பட்டது.
கேள்வி:- ஸ்ரீவத்சவா எதற்கு கைது செய்யப்பட்டார்?
பதில்:- கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அப்படியே விற்க முடியாது என்பதால் மொத்தமாக உருக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்கள். இதற்காக எந்திரம் ஒன்றையும் வாங்கி இருக்கிறார்கள். அந்த எந்திரத்தை வாங்குவதற்கு ஸ்ரீவத்சவா உறுதுணையாக இருந்துள்ளார். குரோம்பேட்டையில் உள்ள லாட்ஜில் தங்கி இந்த நகைகளை உருக்க முயற்சி செய்துள்ளார்கள். நகையை உருக்க தெரிந்த நபர் ஒருவரையும் அழைத்து வந்துள்ளனர். அவரை தேடி வருகிறோம். நகையை உருக்க தயாராக போது இது சின்ன எந்திரம், இவ்வளவு நகைகளை உருக்க முடியாது என்பதால் அவர்களால் உருக்க முடியவில்லை.
கேள்வி:- மீட்கப்பட்ட நகைகளில் கவரிங் நகைகள் ஏதேனும் இருந்ததா?
பதில்:- வங்கி ஊழியர்களை வைத்து மீட்கப்பட்ட நகைகள் ஆராயப்பட்டது. அவர்கள் தங்களுடைய நிதி நிறுவனத்தில் கொள்ளை போன நகைகள் என்பதை உறுதி செய்துள்ளார்கள்.
கேள்வி:- இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிக்கி இருப்பது, போலீஸ்துறைக்கு கரும்புள்ளியாக…
பதில்:- சமூகம் என்பது எல்லோரும் சேர்ந்தது தான். இதில் போலீஸ்துறையை மட்டும் தனியாக பார்க்க முடியாது. தற்போது அவரை நாங்கள் விட்டிருந்தால்தான் கரும்புள்ளி என்று எடுத்துக்கொள்ள முடியும். இவ்வளவு பெரிய வழக்கை சீக்கிரம் முடித்திருக்கிறோம் என்பதை சாதனையாகதான் பார்க்க முடியும்.
கேள்வி:- இந்த கொள்ளைக்கான காரணம் என்ன?
பதில்:- இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணத்தேவைக்காகவே இருந்த கொள்ளை நடந்துள்ளது. குற்றவாளிகள் முககவசம் அணிந்திருந்தாலும், அடையாளம் கண்டு கைது செய்துள்ளோம்.
கேள்வி:- இந்த வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:- மேற்கொண்டு வேறு ஏதேனும் தகவல் வரும்பட்சத்தில் அதனடிப்படையில் கண்டிப்பாக விசாரணை நடத்தப்படும்.
கேள்வி:- இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் மனைவி, இன்ஸ்பெக்டர் மனைவியிடம் விசாரணை நடைபெறுகிறதா?
பதில்:- மேற்கொண்டு வரும் தகவல் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான முருகன் இந்த வங்கியில் வேலைபார்த்ததால் அலாரத்தை அணைத்து வைத்துள்ளார். அதனால்தான் வெளியே சப்தம் கேட்கவில்லை. கொள்ளை சம்பவம் நடந்து 20 நிமிடங்கள் கழித்து வாடிக்கையாளர் ஒருவர் உள்ளே சென்ற பிறகுதான் எங்களுக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது. எனவே வங்கி, நிதி நிறுவனங்கள் அலாரம் சிஸ்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்த இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது இணை கமிஷனர் ராஜேஸ்வரி, துணை கமிஷனர் விஜயகுமார் உள்பட போலீஸ்அதிகாரிகள் உடனிருந்தனர்.