எடப்பாடி பழனிசாமி – எஸ்.பி.வேலுமணி அணியினர் ஒன்றிணைந்தனர்
அதிமுகவுக்குள் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, எடப்பாடி பழனிசாமியுடன் சமாதானப் போக்கைக் கடைப்பிடிக்க எஸ்பி வேலுமணி தரப்பு அதிரடி முடிவு எடுத்துள்ளது. இதற்காகத் தங்கமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகிய மூத்த நிர்வாகிகளின் மூலமாக எடப்பாடி பழனிசாமியுடன் தூது சென்று தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அதில் எஸ்பி வேலுமணி அணியினர் முன்வைத்த ஒரு சில முக்கியக் கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்வதாக பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
இந்தச் சமரச உடன்பாட்டின் காரணமாக, இன்று எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்பி வேலுமணி அணியினர் அதிகாரப்பூர்வமாக ஒன்றிணையும் நிகழ்வு அரங்கேறியுள்ளது; இதற்காக எஸ்பி வேலுமணி, சி. விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன், லால்குடி எம்.எல்.ஏ லீமா ரோஸ் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து, அவருடன் கைகுலுக்கித் தங்களது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.
இருப்பினும், இந்தச் சமாதான இணைப்பில் இன்னும் முழுமையான உடன்பாடு ஏற்படாத காரணத்தால், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ-வான சி.வி. சண்முகம் மற்றும் விராலிமலை எம், எல்.ஏ-வான விஜயபாஸ்கர் போன்றோர் மட்டும் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வராமல் இந்த நிகழ்வைப் புறக்கணித்துத் தவிர்த்துள்ளது அதிமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்கள் மத்தியில் இன்னமும் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
