Tamilசெய்திகள்

சென்னை – நெல்லை இடையிலான வந்தேபாரத் ரெயில் இந்த மாதம் இயக்கப்படுகிறது – ரெயில்வே துறை தகவல்

இந்திய ரெயில்வே துறையை மேம்படுத்த ரெயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், அதி நவீன சொகுசு வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயிலுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், தொடர்ந்து சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதையேற்று சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை ரெயில்வே துறையினர் மேற்கொண்டனர். சமீபத்தில் நெல்லை-நாகர்கோவில் இடையேயான அகலப்பாதை பணிகளை ஆய்வு செய்த தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் கூறுகையில், வந்தே பாரத் ரெயில் அக்டோபர் மாதத்தில் சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும். இதற்காக சந்திப்பு ரெயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணிகள், வந்தே பாரத் பெட்டிகளை பராமரிக்க தேவையான பிட்லைன் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்நிலையில் ரெயில்வே துறை சார்பில் புதிய அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் 4 வந்தே பாரத் ரெயில்கள் புதிதாக இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டெல்லி-சண்டிகருக்கும் (243 கிலோ மீட்டர் தூரம்), சென்னையில் இருந்து 622 கிலோமீட்டர் தூரம் கொண்ட நெல்லைக்கும், குவாலியரில் இருந்து 432 கிலோ மீட்டர் தூரத்தில் போபாலுக்கும், லக்னோவில் இருந்து பிரயாக்ராஜ்க்கும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த ரெயில்கள் பகல் நேரத்தில் இயக்கப்படும் என்பதால் பயணிகள் கூட்டம் சற்று குறைவாக இருக்கும் என்று ரெயில்வே நிர்வாகம் கருதுகிறது. இதனால் 16 பெட்டிகளுக்கு பதிலாக 8 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயிலானது இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரெயில் 8 பெட்டிகளை கொண்டிருக்கும்.

இதில் 1 பெட்டி வி.ஐ.பி.களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 2 புறமும் தலா 2 இருக்கைகள் அமைந்திருக்கும். அதேபோல் மீதமுள்ள 7 பெட்டிகளில் ஒருபுறம் 3 இருக்கைகளும், மற்றொரு புறம் 2 இருக்கைகளும் என ஒரு வரிசையில் 5 அல்லது 6 இருக்கைகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரெயிலில் ஒரே நேரத்தில் மொத்தம் 552 பயணிகள் பயணிக்க முடியும் எனவும், இதில் காத்திருப்பு பட்டியல் உள்ளிட்ட வசதிகள் கிடையாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வி.ஐ.பி. பெட்டியில் பயணம் செய்ய தனிநபர் ஒருவருக்கு ரூ.2,800 முதல் ரூ.3 ஆயிரம் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ளது. மற்ற பெட்டிகளில் பயணம் செய்ய தனிநபர் ஒருவருக்கு ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை வசூலிக்கப்பட உள்ளது.

இந்த ரெயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு சென்னை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்தடையும் வகையில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், பயண நேரத்தை பெரிதும் குறைப்பதோடு, சொகுசு வசதிகளும் இருப்பதால் வந்தே பாரத் ரெயில் சேவை பயணிகள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது நெல்லைக்கு சென்னையில் இருந்து வந்தே பாரத் ரெயில் இந்த மாதமே இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளதால், தென்மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வழக்கமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை சென்றடைய 10 மணி நேரம் 10 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. தற்போது வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டால் 8 மணி நேரத்திற்குள் சென்றடையும். இதனால் பயண நேரம் 2 மணி நேரம் முதல் 2.30 மணி நேரம் வரை மிச்சமாகும். குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டும் வந்தே பாரத் நின்று சென்றால் கூடுதல் நேரம் மிச்சமாகும் என்றார்.