டி20 உலகக் கோப்பை – இந்திய அணியில் ஒரு இடம் மட்டுமே உள்ளதாக கோலி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு இறுதியில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதற்கான சிறந்த அணியை தேர்வு செய்வதில் இந்திய அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இதனால் டி20 தொடரை இழந்தாலும் பரவாயில்லை என்ற அடிப்படையில் புதுப்புது வீரர்களை களம் இறக்கி சோதனை செய்து வருகிறது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நாளை தொடங்குகிறது. இதில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் களம் இறக்கப்பட உள்ளனர். மேலும், சாஹர் உள்ளார். பும்ரா ஓய்வில் உள்ளார்.
இந்தத் தொடரில் இருந்து இந்தியா உலகக்கோப்பை அணிக்கான வீரர்களை தயார் செய்வதில் ஆர்வம் காட்டும். பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடிப்பது உறுதி. தற்போதில் இருந்து முகமது ஷமியை தயார் செய்ய நிர்வாகம் விரும்புகிறது.
இந்நிலையில் இன்னும் ஒரு இடம் மட்டும்தான் உள்ளது என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘வேகப்பந்து வீச்சு யுனிட்டில் இன்னும் ஒரு இடம் மட்டுமே மீதமுள்ளது. ஏறக்குறைய மூன்று வீரர்கள் அவர்களுடைய இடத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். அந்த இடத்தை பிடிக்க ஆரோக்கியமான போட்டி நிலவி வருகிறது. அது எப்படி வெளிப்படுகிறது என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கும்.
வேகப்பந்து வீச்சு எங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்காது. புவனேஷ்வர் குமார், பும்ரா அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள். டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பான வகையில் பந்து வீசி வருகிறார்கள். தற்போது தீபக் சாஹர் அணிக்குள் வந்து சிறப்பாக பந்து வீசி வருகிறார்.
முகமது ஷமி அணிக்கு திரும்பியுள்ளார். அவர் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவருடைய ரிதத்தை, குறிப்பாக டி20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்றவாறு பந்து வீச்சை மெருகேற்றிட்டால், ஆஸ்திரேலியா போன்ற சூழ்நிலையில் அபாரமாக பந்து வீசக்கூடியவர். குறிப்பாக புதுப்பந்தில் விக்கெட்டுக்களை வீழ்த்தும் திறமை படைத்தவர். யார்க்கர் பந்துகளை துல்லியமாக வெளிப்படுத்துவதற்கான வேகம் அவரிடல் உள்ளது. மேலும் சில வீரர்கள் எங்களது கழுகு பார்வையின் கீழ் உள்ளனர்.
டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும்போது சிறந்த அணியாக உள்ளோம் என்று நினைக்கவில்லை. அதேபோல் குறைந்த ஸ்கோரை அடித்து, எதிரணியை கட்டுப்படுத்த வேண்டும். ஆகவே, இந்த இரண்டிலும் கவனம் செலுத்துவது அவசியம்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டை விட டி20 கிரிக்கெட்டில் அதிக அளவில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அதற்கு ஏற்படி அதிக அளவில் ரிஸ்க் எடுக்க வேண்டும்.
ஒரு அணி என்ற வகையில் இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். நம்முடைய நிலை எங்கே என்று ஒரு புள்ளியை குறிக்க முடியாது. அணி தரவரிசையில் வலுவான ஆடும் லெவனை பொறுத்து அமையும். ஆனால், நாங்கள் பெரும்பாலான போட்டிகளில் வலுவான வீரர்களுடன் இணைந்து விளையாடவில்லை’’ என்றார்.