டெல்லியில் பனிமூட்டம் அதிகரிப்பு – விமான போக்குவரத்து பாதிப்பு
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விடிந்து வெகுநேரம் ஆகியும் பனி விலகாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்குகின்றனர்.
பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக டெல்லியில் இன்று விமான போக்குவரத்து முடங்கியது. காலை 7.30 மணி முதல் டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. டெல்லிக்கு வந்த மூன்று விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
டெல்லியில் இருந்து வெளியூர் செல்வதற்கு முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு அந்தந்த விமான நிறுவனங்கள் சார்பில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. பயணிகள் விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக, பயணம் செய்யவேண்டிய விமானத்தின் நிலவரத்தை சரிபார்த்துக்கொள்ளும்படி கூறப்பட்டுள்ளது. வானிலை சீரடைந்ததும் விமானங்கள் இயக்கப்படும்.
இதேபோல் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 12 ரெயில்களின் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.