தனுஷ் படத்திற்கு எதிராக போலீசில் புகார்!
தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கர்ணன்’. மாரி செல்வராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படையினர், நெல்லை மாவட்ட செயலாளர் பவானி வேல்முருகன் தலைமையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ‘‘1991-ம் ஆண்டில் நடந்த கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி நடிகர் தனுஷ் நடிப்பில் எடுக்கப்பட்டு வருகின்ற ‘கர்ணன்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும். தென் மாவட்டங்களில் அமைதி நிலவி வருகின்ற சூழ்நிலையில் இதுபோன்ற படங்களால் மீண்டும் கலவர சூழ்நிலை எற்படும். அந்த படத்தில் மணியாச்சி போலீஸ் நிலையத்தை தாக்குவது போன்ற காட்சி இடம் பெற்று உள்ளதாக கூறப்படுகிறது. இது காவல்துறை கண்ணியத்தை கெடுப்பதாக உள்ளது. எனவே, இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறி உள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி மற்றொரு மனுவை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்திலும் அவர்கள் கொடுத்தனர்.