Tamilசெய்திகள்

தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை கவர்னர் ஆர்.என்.ரவி சீரழிக்கப் பார்க்கிறார் – தொல்.திருமாவளவன் கண்டனம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானக் கூறுகளாகத் திகழும் சமத்துவம், சமூகநீதி போன்றவற்றைக் கொச்சைப்படுத்தியும்; அவற்றுக்கு நேரெதிரான சனாதனத்தைப் போற்றியும் தொடர்ந்து பேசி வருகின்ற தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சனாதனத்தைப் போற்றுகிற இந்திய ஒன்றிய பா.ஜ.க. அரசோ வேலைவாய்ப்பின்மையை, விலைவாசி ஏற்றத்தை, பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தி எல்லா தளங்களிலும் தோல்வியடைந்து வெகுமக்களுக்கு எதிரான அரசாக இருக்கிறது. நாடறிந்த இவ்வுண்மையை கவர்னர் ரவியால் மறுக்க முடியுமா?

பெரியாரின் சிந்தனைகளுக்கும் தி.மு.க. அரசுக்கும் எதிராகப் பேசுவதாக எண்ணிக்கொண்டு உழைக்கும் எளிய மக்களின் நலன்களுக்கு எதிராகவும்; மதத்தின் பெயரால் மக்கள் ஒற்றுமையைச் சிதைக்கும் வகையிலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் நோக்கிலும் தொடர்ந்து திட்டமிட்டே பேசியும், செயல்பட்டும் வருகிற கவர்னர், இங்கே சமூக அமைதியை சீர்குலைத்து, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை சீரழிக்கப் பார்க்கிறார்.

ஆன்லைன் ரம்மி மசோதாவுக்கு அனுமதி அளிக்காமல் பலரது சாவுக்குக் காரணமாக இருந்த அவர், ‘ஒரு மசோதாவைக் கிடப்பில் போட்டால் அது செத்துவிட்டது என்று அர்த்தம்’ என்று அகந்தை மேலோங்கப் பேசினார். ஆனால், அவரைக் கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவுடன் பதறியடித்துக் கொண்டு அவசர அவசரமாக அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.

முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதும் அரசியல் வாதியைப் போல அன்றாடம் தேவையற்ற சச்சரவுகளை எழுப்புவதும் ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல என்பதை சுட்டிக் காட்டுகிறோம். அவர் முழுநேர அரசியல்வாதியாகச் செயல்பட விரும்புவதையே அவருடைய நடவடிக்கைகள் உறுதிப்ப டுத்துகின்றன. எனவே, உடனடியாக அவர் பதவி விலகி, வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ். தொண்டராகவே பணியாற்ற வேண்டும்.

அடுத்து, ராஜ்பவன் என்ற தனது அரண்மனையின் பெயரை லோக்பவன் என்று மாற்றப் போவதாகவும் அவர் சொல்லி இருக்கிறார். அதாவது ‘மக்களின் மாளிகை’ என பெயர்சூட்ட விரும்புவதாக பேசியிருக்கிறார். உண்மையில், அவர் மக்களை நேசிப்பவராக இருப்பாரேயானால் தனக்கு இவ்வளவு பெரிய மாளிகை தேவையில்லை; ஒரு சிறிய வீடு போதும் என்று தனது மாளிகையிலிருந்து வெளியேறி, மக்களின் பயன்பாட்டுக்கு என அதனை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.