தலைமை செயலகத்தில் யாகம்? – ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்
தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில், நள்ளிரவில் சிறப்பு யாகம் நடத்தியதாகவும், முதலமைச்சர் பதவியை கைப்பற்ற இந்த யாகத்தை நடத்தியதாகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, யாகம் நடத்தியதாக வெளியான தகவல் குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
தலைமைச் செயலகத்தில் உள்ள என்னுடைய அறையில் சாமி கும்பிடுவது வழக்கம், அதுபோல சாமி கும்பிட்டேன். யாகம் நடத்தவில்லை. யாகம் நடத்தினால் முதல்வர் ஆகிவிட முடியும் என்றால், எம்எல்ஏக்கள் அனைவரும் யாகம் நடத்தலாமே?
யாகம் நடத்தினால் முதல்வர் ஆகிவிட முடியும் என்ற மூட நம்பிக்கையை மு.க.ஸ்டாலின் நம்புகிறாரா? எந்த பக்கம் தாவினால் அரசியல் லாபம் கிடைக்கும் என நினைத்து மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் பல்வேறு செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
அம்மா அறிவித்த மக்கள் நல திட்டங்கள் மற்றும் பல்வேறு புதிய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம். எனவே, மக்கள் முழுமையாக 100-க்கு 100 எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பது தேர்தலின்போது தெரியும். எந்த தேர்தல் வந்தாலும், மக்கள் எங்களுக்கு மகத்தான வெற்றியை அளிப்பார்கள்.