தினகரனை தவிர வேறு யார் வந்தாலும் அதிமுக-வில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் – அமைச்சர் சீனிவாசன்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்தவுடன் உடனடியாக அறிவிக்கப்படும். டி.டி.வி.தினகரனை தவிர வேறு யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். சசிகலா சிறையில் இருந்து வந்தால் அது குறித்து பார்க்கலாம். சின்னதம்பி யானையை கும்கி ஆக மாற்ற வேண்டும் என ஒருவரும், மாற்ற வேண்டாம் என ஒருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுகுறித்து நிபுணர் குழு அமைத்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்.
கஜா புயலால் மலைப்பகுதியில் விழுந்துள்ள மரங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மன்னவனூர் கிராமத்தில் உள்ள பரப்பாறு அணை சீரமைப்பது குறித்து மாவட்ட கலெக்டரும், மாவட்ட வன அதிகாரியும் பேசி முடிவு எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.