திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 1,034 கிலோ தங்கம் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். குறிப்பாக தங்கம் காணிக்கை செலுத்துவது அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை அதிகரித்தாலும் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் அதிக அளவில் தங்கத்தை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டில் 1,031 கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இவற்றை தேவஸ்தான அதிகாரிகள் வங்கியில் டெபாசிட் செய்தனர். இதுவரை ரூ.8,496 கோடி மதிப்பிலான மொத்தம் 11 ஆயிரத்து 329 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதற்கு பிறகு தரிசனம் செய்து வரும் பக்தர்கள் அதிக அளவில் தங்கம் நன்கொடையாக வழங்கி வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 4 ஆயிரம் கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர். தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் பக்தர்கள் அளிக்கும் தங்க காணிக்கையும் உயர்ந்து வருகிறது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று ஒரே நாளில் 58 ஆயிரத்து 690 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 20 ஆயிரத்து 744 பேர் முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ரூ.3.02 கோடி வசூல் ஆனது. பக்தர்கள் சுமார் 6 மணி நேரம் வரை காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.