Tamilசெய்திகள்

கேரளாவில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு

கேரளாவில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவுகிறது.

கோடை மழை பெய்து வரும் நிலையில் கேரளாவில் டெங்கு, அம்மை உள்ளிட்ட நோய்களும் பருவ தொடங்கி இருக்கிறது. இதனால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆலப்புழாவில் உள்ள எடத்துவா மற்றும் மேலும் ஒரு பஞ்சாயத்தில் விவசாய நிலத்தில் வளர்க்கப்பட்ட வாத்துக்கள் அடுத்தடுத்து இறந்தபடி இருந்தன. இதனால் இறந்த வாத்துக்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் இறந்த வாத்துக்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் உடனடியாக சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பறவை காய்ச்சலில் இறந்த வாத்துக்கள் இருந்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த இடத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் செயல்பட்டு வரும் பண்ணையில் வளர்க்கப்படும் பறவைகளை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்டத்தை மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடங்கி இருக்கின்றனர். பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டபோதிலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.