தேர்தல் பிரசாரத்தில் தாறுமாறாக பேசி சர்ச்சையை ஏற்படுத்திய அதிமுக அமைச்சர்
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக ஜோதிமுத்து போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று மணிக்கூண்டில் இறுதிகட்ட பிரசாரம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், பா.ம.க. வேட்பாளர் ஜோதி முத்துவுக்கு பதிலாக சோலைமுத்து என்றார். இதை கேட்டதும் வேட்பாளர் அதிர்ச்சியடைந்து அமைச்சரை திரும்பி பார்த்தார். உடனே சுதாரித்துக் கொண்டு ஜோதிமுத்துவுக்கு வாக்களியுங்கள் என்றார்.
அதன் பின் இந்தியாவில் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் பட்டியலை சொல்லும் போது மம்தா பானர்ஜி, சரத்பவார் என்பதற்கு பதிலாக சரத்குமார் என்றார். இதனால் அருகில் இருந்த தொண்டர்கள் அவரை ஏறிட்டு பார்த்தனர். பின்னர் சரத்பாபு என்றார். இதனால் கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஏற்கனவே நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்ற மேடையிலேயே மாம்பழம் சின்னத்துக்கு பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என பேசினார். அதன் பிறகு நடந்த பல பிரசார கூட்டங்களிலும் ஆப்பிள் சின்னத்துக்கு வாக்கு கேட்டார். இறுதி கட்ட பிரசாரத்திலும் வேட்பாளர் பெயரை மாற்றி கூறியதோடு மட்டுமின்றி நடிகர்கள் பெயரையும் சேர்த்து கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.