Tamilசெய்திகள்

தேர்தல் வரும்போது வியூகம் அமைப்போம் – அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:

புயல் நிவாரண நிதியை பெறுவதற்கு மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்கப்படும். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே, மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படாது. இந்திய நாட்டில் தமிழகமும் ஒரு அங்கம்தான் என்பதை மத்திய அரசு உணரும்.

சட்டசபையில் ம.தி.மு.க.வுக்கு ஒரு உறுப்பினர்கூட கிடையாது. ஆனால் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசு பற்றி குறை கூறிவருகிறார். அவருக்கு தமிழக அரசை பற்றி குறை கூறுவதற்கு எந்த தகுதியும் இல்லை. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தபோது, இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என்று வைகோ அறிக்கை வெளியிட்டு இருந்தார். அவரைப் போல் நேரத்திற்கு தகுந்தார் போன்று மாற்றி பேச முடியாது.

ஒரு வழக்கில் உண்மை தன்மை இல்லை என்றாலோ, போதிய ஆதாரம் இல்லை என்றாலோ அந்த வழக்கை காவல் துறையினர் திரும்ப பெறுவது வழக்கம். அதேபோன்று ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வழக்கை ரத்து செய்து இருக்கலாம்.

ஸ்டெர்லைட் ஆலையை பொருத்தவரை பசுமை தீர்ப்பாயம் அனுப்பிய குழு வழங்கிய அறிக்கையில் மாறுபட்ட கருத்து இருந்ததால், மக்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆனால் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. அ.தி.மு.க.வை பொருத்தவரை தேர்தல் வரும்போது வியூகம் அமைத்து அதனை சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *