தொடர் கன மழையால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் முதல்வர்களிடம் நிலையை கேட்டறிந்த பிரதமர் மோடி
வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. தொடர் மழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இமாச்சல பிரதேசத்தின் பல மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்திலும் பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அங்கு சாலைகள் உள்ளிட்ட பல இடங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 8 மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கன மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் மட்டும் தேசிய பேரிடர் மீட்பு படையின் 39 குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநில முதல்வர்களை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, அந்த மாநிலங்களில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும், மழை வெள்ள மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்துள்ளார்.