நடிகர் சங்கம் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று தொடங்கியது
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 23-ம் தேதி எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு கருதி அந்த கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியது.
இதை எதிர்த்து விஷால் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகர் சங்க தேர்தல் புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற நேற்று அனுமதி வழங்கியது. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலும் இந்த பள்ளியில்தான் நடந்தது.
நடிகர் சங்க தேர்தலில் விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து நடிகர்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
நடிகர் சங்க தேர்தலுக்கான தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் வாக்களிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.