நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் தோல்வி – ரோஹித் சர்மா வருத்தம்
நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 219 ரன்கள் குவித்தது. பின்னர் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழக்க இந்தியா 19.2 ஓவரில் 139 ரன்னில் சுருண்டது.
இதனால் 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியடைந்தது. இந்தத்தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் ‘‘மூன்று துறைகளிலும் நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம். 200 ரன்களுக்கு மேற்பட்ட டார்கெட்டை சேஸிங் செய்வது எளிதான காரியம் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும்.
மிகப்பெரிய இலக்கை விரட்டும்போது சிறந்த பார்ட்னர்ஷிப் இல்லை என்றால், அந்தப்பணி கடினமாகிவிடும். எங்கள் அணியில் 8 பேட்ஸ்மேன்கள் இருந்தனர். இதனால் நாங்கள் சேஸிங் செய்திருக்கனும். எங்களுக்கு ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. அதில் தோற்றுவிட்டோம்’’ என்றார்.
வெற்றி குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில் ‘‘அனைத்துத் துறையிலும் சிறப்பான செயல்பாடு. செய்பெர்ட் சிறப்பாக விளையாடினார். பந்து வீச்சுத்துறை அபாரம். போர்டில் எங்களுக்கு போதுமான ரன்கள் இருந்தன.
என்றாலும், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் அபாரமாக இருந்தது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான போட்டியில் எங்கள் அணியே வெற்றி பெற்றது. இந்த தொடர் முழுவதும நாங்கள் இந்த உத்வேகத்தை தொடர வேண்டும். எங்களால் இதை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.