நீலகிரி மாவட்டத்தில் இந்த வருட வடகிழக்கு பருவ மழை அதிகமாக பெய்திருக்கிறதாம்!
அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரையிலான கால கட்டத்தை வடகிழக்கு பருவமழை காலமாக இந்திய வானிலை ஆய்வு மையம் வரையறுத்துள்ளது.
அதன்படி கடந்த 3 மாதத்தில் நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் உள்பட மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
தொடர்ந்து பெய்த கன மழையால் மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சில இடங்களில் சாலை போக்குவரத்தும் தூண்டிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் சராசரியாக 475 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். இந்த ஆண்டு மாவட்டத்தில் 782 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இது சராசரியை விட 64 சதவீதம் அதிகமாகும். நீண்ட காலத்துக்கு பிறகு தற்போது தான் நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளதாக நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் சமூக கலாசார அறக்கட்டளை நிர்வாகி சிவதாஸ் தெரிவித்தார்.
பருவமழை கைகொடுத்திருப்பதால் வரும் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை இருக்காது. மேலும் வனப்பகுதிகளில் தண்ணீர் இருப்பதால் வன விலங்குகளுக்கும் போதிய தண்ணீர் கிடைத்துவிடும் சூழல் உள்ளது.
மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. கூடுதல் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் வீடுகளுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.