நீலகிரி மாவட்டத்தில் எச்சில் துப்புனால் அபராதம்!
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், சுகாதாரத்தை பேணி காக்கவும், பல்வேறு தூய்மை திட்டங்களை, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
ஜனவரி 1-ந்தேதி முதல் 21 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது.நேற்று முன்தினம் (1-ந்தேதி) முதல் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், குளிர்பான பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பதிலாக 70 இடங்களில் தண்ணீர் ஏ.டி.எம். எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. குடிநீர் தேவைப்படுவோர் 1 லிட்டர் ரூ.5 செலுத்தி பாத்திரங்களில் பெற்றுக்கெள்ளலாம். இது 24 மணி நேரமும் செயல்படுகிறது.
இந்நிலையில்உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில்பொது இடங்களில் மக்கள் எச்சில் துப்புவதற்கு, தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறுவோருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர், இன்னசென்ட் திவ்யா கூறும்போது, புகையிலை, பான் மசாலா, குட்கா, வெற்றிலை பாக்கு ஆகியவற்றைமென்று பொது இடங்களில் துப்பினால், 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். கண்காணிப்பு மற்றும் வசூலில் உள்ளாட்சி அமைப்பினர் ஈடுபடுவார்கள். இந்த உத்தரவுக்கு மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படுவது ஒரு சில வெளிநாடுகளில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. நீலகிரியில் பிளாஸ்டிக் பொருட்கள் தடையை தொடர்ந்து பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என்ற நடவடிக்கை வரவேற்பை பெற்றுள்ளது.
நீலகிரி விரைவில் தூய்மையான மாவட்டமாக மாறும் என்று இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.