Tamilசெய்திகள்

பாகிஸ்தானுக்காக சீனா தயாரித்துள்ள போர்க்கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீன ராணுவத்தின் உளவு கப்பலான யுவான் வாங்-5 ஹம்பந் தோட்டை துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதித்துள்ளது. இதையடுத்து அந்த கப்பல் இன்று இலங்கை வருகிறது. 17-ந்தேதி வரை இலங்கை துறைமுகத்தில் அது நிறுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, பாகிஸ்தானுக்காக சீனா, பி.என்.எஸ் தைமூர் என்ற போர் கப்பலை தயாரித்துள்ளது. ஷாங்காயில் உள்ள டோங் துறைமுகத்தில் கட்டப்பட்ட இந்த கப்பல் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட மற்றும் உயர் தொழில்நுட்ப ஆயுதங்களைக் கொண்டதாகும். ஆகஸ்ட் 15 ஆம் தேதி கராச்சிக்கு இதை கொண்டு செல்ல சீனா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கப்பலை பங்களாதேஷ் கடல் பகுதி வழியே பாகிஸ்தானுக்குள் கொண்டு செல்ல அந்நாட்டு அரசிடம் சீனா அனுமதி கோரியிருந்தது. ஆனால் சட்டோகிராம் துறைமுகத்தில் அந்த கப்பலை நிறுத்த பங்களாதேஷ் அரசு அனுமதி மறுத்து விட்டது.

இதையடுத்து பாக் போர் கப்பலான தைமூரை கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படையில் இணைப்பதற்காக செல்லும் வழியில், கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்க இலங்கை அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.