Tamilசெய்திகள்

பா.ஜ.க, காங்கிரஸுக்கு எதிராக புதிய கூட்டணி – அகிலேஷ் யாதவின் கருத்தால் இந்தியா கூட்டணியில் பிளவு

பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க. உள்ளடக்கிய இந்தியா கூட்டணியில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் உள்ளது. சமீப காலமாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இந்தியா கூட்டணியை சாடி வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துகளை அவர் பேசி வருவது இந்தியா கூட்டணியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அவர் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மையமாக கொண்டு புதிய கூட்டணி அமைப்பதாக அறிவித்து உள்ளார். மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் வருகிற 17-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி டாமோவில் நேற்று சமாஜ்வாடி கட்சி சார்பாக பிரமாண்ச பேரணி நடைபெற்றது. இதில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் கலந்து கொண்டு பேசியதாவது:-

இன்றைய சூழலில் நாட்டுக்கு புதிய சித்தாந்தம், புதிய கட்சி மற்றும் புதிய கூட்டணி தேவை. இதற்காக புதிய கூட்டணி (பி.டி.ஏ.) அமைக்க உள்ளோம். பா.ஜ.கவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் ஆகியவற்றை இந்த கூட்டணி தோற்கடிக்கும். பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரசின் கொள்கைகள் ஒரே மாதிரியானவை. மேலும், இந்த கட்சிகளின் தவறான கொள்கைகளால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். அதே நேரத்தில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் பி டீமாக காங்கிரஸ் செயல்படுகிறது. சமாஜ்வாடியை அதன் கூட்டணியாக காங்கிரஸ் ஏற்கவில்லை. அவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பேசி வருகின்றனர். சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து முன்னேறும் வாய்ப்பு காங்கிரசுக்கு கிடைத்தாலும், அவர்கள் மதிக்கவில்லை. எங்களது பி.டி.ஏ. அவர்களுக்கு தகுந்த பதிலை அளிக்கும்.

பா.ஜ.க.வும் காங்கிரசும் ஒன்றுதான். அவர்களின் கொள்கைகள் ஒன்றுதான். 2 கட்சிகளும் மத்திய பிரதேசத்தில் ஊழலையும், கொள்ளையையும் உருவாக்கியுள்ளன. 2 கட்சிகளும் தலித் மற்றும் பழங்குடியினருக்கு துரோகம் இழைத்துவிட்டன. தலித்துகள் மற்றும் பழங்குடியினர் ஏழைகளாக இருப்பதை இந்த கட்சிகள் விரும்புகின்றன. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 27 சதவீத இடஒதுக்கீடு கூட வழங்கவில்லை. பா.ஜ.க. மற்றும் காங்கிரசின் தவறான கொள்கைகளால் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் சிரமப்படுகின்றனர். காங்கிரசின் கொள்கைகள் ஏழைகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் நலனுக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது. இப்போது பா.ஜ.க.வும் அதே பாதையில் செல்கிறது. 2 கட்சிகளும் ஓ.பி.சி., தலித் மற்றும் பழங்குடியினருக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து அவர்களை ஏமாற்றி வருகின்றன.

எனவே, நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நாளில் 2 கட்சிகளுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். ஏழைகள், விவசாயிகள், ஓபிசிக்கள், தலித்கள், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் ஒன்று கூடினால்தான் மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸை அழிக்க முடியும். விவசாயிகள், ஏழைகள், இளைஞர்கள் நலனுக்காக சமாஜ்வாடி கட்சி போராடும் என்று பேசியுள்ளார். அகிலேஷ் யாதவின் இந்த பேச்சு இந்தியா கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாடி வேட்பாளர்களை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இதனால் மத்தியப் பிரதேசத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது. இது இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.