பா.ஜ.க-வால் தமிழர்களின் இதயத்தை தொட முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தி.மு.க. மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் 50 நாட்களில் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் இன்று தொடங்கியது. சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு மருத்துவர் அணி செயலாளர் எழிலன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., மருத்துவர் அணி தலைவர் கனிமொழி என்.வி.என்.சோமு எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் அணி இணை செயலாளர் எஸ்.மோகன் வரவேற்றார்.
கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
நீட் விலக்குதான் எங்கள் இலக்கு என்று தொடர்ந்து போராடி வருகிறோம். நீட் தேர்வால் தரமான டாக்டர்கள் கிடைப்பார்கள் என்றார்கள். மருத்துவக் கல்லூரிகளில் பணம் கொடுத்து சேருவது தடுக்கப்படும் என்றும் சொன்னார்கள். ஆனால் முதுகலை பட்டப்படிப்பில் நீட் தேர்வில் முட்டை மதிப்பெண் எடுத்தாலும் பணம் கொடுத்து சேர முடியும் என்பதைதான் உருவாக்கி இருக்கிறார்கள். (அப்போது ஒரு முட்டையை கையில் எடுத்து காட்டினார்) நீட் தேர்வுக்கு எதிராக போராட அ.தி.மு.க.வினரையும் அழைக்கிறேன். எல்லோரும் சேர்ந்து போராடுவோம் வாருங்கள். கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுங்கள். முன்பு பா.ஜனதா கூட்டணியில் இருந்ததால் வரமுடியவில்லை. இப்போது வெளியே வந்து விட்டீர்கள்.
தமிழர்களின் உரிமையை காக்க வாருங்கள். இதை வெறும் தி.மு.க.வின் பிரச்சனை என்று யாரும் கருத வேண்டாம். இது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சனை. இதில் தொடர்ந்து ஒன்றிய அரசு அலட்சியம் செய்தால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்கிறேன்.
இந்த நேரத்தில் ஒரு கதையை சொல்ல விரும்புகிறேன். சாவியை பார்த்து சுத்தியல் கேட்டதாம் நான் இவ்வளவு பெரியதாகவும் வலிமையாகவும் இருந்தும் பூட்டை திறக்க முடியவில்லை. ஆனால் நீ எளிதாக திறந்து விடுகிறாய் என்றதாம். அதற்கு சாவி சொன்னதாம் நீ தலையில் அடிக்கிறாய். நான் பூட்டின் இதயத்தை தொடுகிறேன் என்றதாம். அதை போல் எவ்வளவு வலிமையான கட்சியாக இருந்தாலும் பாரதிய ஜனதாவால் தமிழர்களின் இதயத்தை தொட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் சென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் லோகேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மணிரத்தினம், செந்தில்வேல், வக்கீல் மதிவதனி, பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் பேசினார்கள். அமைச்சர் மா.சுப்பிரமணியன், தயாநிதிமாறன் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் தமிழகம் முழுவதும் 63 கட்சி மாவட்டங்களிலும் இன்று கையெழுத்து இயக்கம் தொடங்கியது.