Tamilசெய்திகள்

பா.ஜ.க 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது – ராகுல் காந்தி பேச்சு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இன்று உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-

இந்த பாராளுமன்ற தேர்தல் சித்தாந்தத்தின் தேர்தல். ஒரு புறம். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா அரசியல் சாசனத்தையும், ஜனநாயக அமைப்பையும் அழிக்க முயல்கின்றன. மறுபுறம் இந்தியா கூட்டணியும் காங்கிரசும் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க முயற்சிக்கின்றன.

தேர்தலில் மூன்று பெரிய பிரச்சனைகள் உள்ளன. வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய பிரச்சனை. 2-வது பண வீக்க பிரச்சனை. ஆனால் அதை பற்றி பேசாமல் பா.ஜனதா மக்களை திசை திருப்புகிறது. இந்த பிரச்சனைகளை பிரதமரோ பா.ஜனதாவோ பேசுவதில்லை.

சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி நீண்ட பேட்டி ஒன்றை அளித்தார். ஆனால் அது தோல்வி அடைந்தது. அதில் தேர்தல் பத்திரங்கள் பற்றி விளக்க முயன்றார். வெளிப்படைத் தன்மைக்காகவும், தூய்மையான அரசியலுக்காகவும் தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டதாக பிரதமர் மோடி கூறுகிறார். இது உண்மையாக இருந்தால் ஏன் அந்த திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. வெளிப்படைத்தன்மையை கொண்டு வர விரும்பினால் பா.ஜனதாவுக்கு பணம் கொடுத்தவர்களின் பெயர்களை ஏன் மறைத்தீர்கள். அவர்கள் உங்களுக்கு (பா.ஜனதா) பணம் கொடுத்த தேதிகளை ஏன் மறைத்தீர்கள்?

தேர்தல் பத்திரம் திட்டம் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் திட்டம். இதை இந்தியாவில் அனைத்து தொழில் அதிபர்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜனதா ஊழல்வாதிகளை மட்டும் வைத்து கொள்ளவில்லை. ஊழல் பணத்தையும் வைத்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வென்றால் அரசியல் சாசனம் சிதைக்கப்படும்.

இந்த விவகாரத்தில் பிரதமர் எவ்வளவு தெளிவுபடுத்த விரும்பினாலும், அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால் பிரதமர், ஊழலின் சாம்பியன் என்பது முழு நாட்டிற்கும் தெரியும். 15-20 நாட்களுக்கு முன்பு பா.ஜனதா 180 தொகுதிகளில் வெற்றி பெறும் என நினைத்தேன். ஆனால் தற்போது 150 இடங்கள்தான் பா.ஜனதாவுக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன். பா.ஜனதா 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது.

ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வரும் தகவல்களின்படி நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். உத்தரபிரதேசத்தில் நாங்கள் மிகவும் வலுவான கூட்டணியை கொண்டு உள்ளோம். நாங்கள் சிறப்பாக செயல்படுவோம். உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றும். இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வலுவான அடித்தளம் அமைந்து இருக்கிறது. நான் அமேதி அல்லது ரேபரேலியில் போட்டியிடுவேனா? என்று கேள்வி கேட்கிறார்கள். இது பா.ஜனதாவின் கேள்வி. காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வு முடிவுகள் அனைத்தும் மத்திய தேர்தல் கமிட்டி மூலம் எடுக்கப்படுகிறது. எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் நான் பின்பற்றுவேன்.

கடந்த 10 ஆண்டுகளில் பண மதிப்பிழப்பு, தவறான ஜி.எஸ்.டி. வரி மற்றும் அதானி போன்ற பெரும் கோடீஸ்வரர்களை ஆதரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கும் முறையை பிரதமர் மோடி குறைத்துள்ளார். வேலைவாய்ப்பை மீண்டும் வலுப்படுத்தவது எங்களது முதல் பணியாகும். அதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையில் 23 யோசனைகளை வழங்கியுள்ளோம். இதில் பயிற்சி உரிமை என்ற யோசனையும் ஒன்று.

உத்தரபிரதேசத்தின் அனைத்து பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ பெற்றவர்களுக்கு பயிற்சிக்கான உரிமையை வழங்க முடிவு செய்துள்ளோம். பயிற்சி அளிக்கப்படும். இளைஞர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் டெபாசிட் செய்வோம். இந்த உரிமையை கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வழங்குவோம். தேர்வு வினாத்தாள் கசிவை தடுக்க சட்டம் இயற்றுவோம்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.