பிரபு தேவா இயக்கும் படத்திற்கு எதிர்ப்பு!
கதாநாயகனாக நடித்து விட்டு டைரக்டரான பிரபுதேவா தற்போது இந்தியில் படங்கள் இயக்கி வருகிறார். ஏற்கனவே அக்ஷய்குமாரின் ரவுடி ரத்தோர், ஆக்ஷன் ஜாக்ஷன், சல்மான்கான் நடித்த வான்டட் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். மீண்டும் சல்மான்கானை வைத்து தபாங்-3 படத்தை தற்போது டைரக்டு செய்துள்ளார்.
இதன் முதல் பாகம் 2010-ல் வெளியாகி வசூல் குவித்தது. இந்த படம் தமிழில் சிம்பு நடிக்க ஒஸ்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது. தபாங் 2-ம் பாகம் 2012-ல் வெளியானது. தபாங் 3-ம் பாகம் வருகிற 20-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர். படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அதில் சாதுக்கள் என்ற சாமியார்கள் மேற்கத்திய நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் உள்ளன. இந்து தெய்வங்களையும் காட்சிப்படுத்தி உள்ளனர். இதற்கு மராட்டியத்தை சேர்ந்த இந்து ஜன்ஜக்ருதி சமிதி என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து தணிக்கை குழுவுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
அதில், “தபாங்-3 படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள பாடலில் சாமியார்களையும் இந்து கடவுள்களையும் அவதூறாக சித்தரித்து உள்ளனர். சாமியார்கள் மேற்கத்திய நடனம் ஆடுவதுபோன்ற காட்சிகளை வைத்துள்ளனர். இது மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. அந்த காட்சியை நீக்க வேண்டும். படத்துக்கு வழங்கப்பட்டுள்ள தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சல்மான் கான் கூறுகையில், விளம்பரம் தேடுவதற்காக இத்தகைய நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என கூறியுள்ளார்.