Tamilசெய்திகள்

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்புவோம் – திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் முடிவு

டெல்லியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் தி.மு.க. எம்.பி.க்கள் என்னென்ன பிரச்சினைகளை பற்றி பேச வேண்டும். சபை நடவடிக்கைகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டி இருந்தார்.

இந்த கூட்டம் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்தில் பாராளுமன்ற இரு அவைகளின் தி.மு.க. எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுச் செயலாளர் துரைமுருகன் பொருளாளர் டி.ஆர்.பாலு முதன்மை செயலாளர், கே.என்.நேரு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்களின் செயல்பாடுகள் பாராளுமன்றத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பேசினார். கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அவை வருமாறு:-

கடந்த 9 ஆண்டு கால பா.ஜ.க. அரசால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகளை, தமிழ்நாட்டை-தமிழ்நாட்டு மக்களை புறக்கணித்து ஏமாற்றியதை வருகின்ற பாராளுமன்றக் கூட்டத்தொடரில் உரக்கக் குரலெழுப்புவோம். வங்கி கணக்கு ஒவ்வொன்றிலும் “15 லட்சம் ரூபாய் போடுவதற்கு பதில்,  ஒவ்வொரு குடும்பத்திலும் விதவிதமான வரி வசூல் நடக்கிறது.

“மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி பங்களிப்பில் உரிய நிதி வழங்காமல் வஞ்சிப்பது.

“பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைப்புக்குப் பதில்” இந்த மூன்றின் விலையையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்த்தியது. “ஆண்டிற்கு 2 கோடி வேலைவாய்ப்பு வழங்குவதற்கு பதில்” ஒட்டுமொத்த இளைஞர்களையும் வேலையில்லா திண்டாட்டத்தில் கொண்டு வந்து விட்டது. மணிப்பூர் மாநிலமே பற்றி எரிகிறபோது உலகம் சுற்றி அறிவுரை கூறுவது. “அரசியல் சட்ட அமைப்புகளின் தன்னாட்சியை கட்டிக்காப்பதற்கு பதில்” அமலாக்கத்துறை, சிபிஐ, ஒன்றிய விழிப்புணர்வு ஆணையம், தேர்தல் ஆணையம், சட்ட ஆணையம், வருமான வரித்துறை, நீதித்துறை என அனைத்தின் சுதந்திரத்தையும் பறித்து இந்தியாவின் ஜனநாயக அடித்தளத்திற்கே ஆபத்தை உருவாக்கி வருவது.

“நடுநிலையான கவர்னர்களை நியமிக்க வேண்டும் என்ற சர்க்காரியா ஆணையத்தின் பரிந்துரைக்குப் பதில்”, அரசியல் சட்ட பதவிகளில் ஆர்.எஸ்.எஸ் எண்ணம் உள்ளவர்களை கவர்னர்களாக நியமித்து எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நிர்வாகத்தை முடக்குவது. உச்சகட்டமாக, இப்போது பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று தேர்தல் முழக்கத்தில் இறங்கியிருப்பது.

ஜனநாயக இந்தியா-சமத்துவ இந்தியா-சமூக நீதி இந்தியா-பன்முகத்தன்மையின் பூந்தோட்டமாக இருக்கும் இந்தியா என்பது பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியலால்-சனாதன அரசியலால்-இன்று எதேச்சாதிகார இந்தியாவாக மாற்ற இன்னொரு முறை வாக்களியுங்கள் என்று விரைவில் பிரதமர் மோடியும்-அவரது சகாக்களும் வரப் போகிறார்கள். ஆனால், முதல் ஐந்து ஆண்டுகளிலும் சரி-இந்த ஐந்து ஆண்டுகளிலும் சரி தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. அரசு தந்தது என்ன?

ஜி.எஸ்.டி இழப்பீடு பறிப்பு. மின்கட்டணத்தை ஏற்றும் உதய் திட்டம். ஒற்றைச் செங்கல்லுடன் எய்ம்ஸ் மருத்துவமனை. தமிழ்நாட்டிற்கும்-தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராகச் செயல்பட ஒரு கவர்னர். சமூகநீதி அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூட நீதிபதிகளை நியமிக்காமல் வஞ்சித்தது. என தமிழ்நாட்டிற்கு கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜ.க. தந்தது, “நிதியும் இல்லை. திட்டங்களும் இல்லை. ஒன்றிய அரசு வேலைவாய்ப்புகளிலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இடமுமில்லை” என்பதுதான்.

இன்றைக்கு நாட்டில் வெறுப்புவாத அரசியல் பற்றி எரிகிறது. மணிப்பூர் கலவரத்தீ இன்னும் அடங்கவில்லை. தக்காளி, சின்ன வெங்காயம், பருப்பு என அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு விண்ணை முட்டி நிற்கிறது. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. எம்.எல்.ஏ.-எம்.பி.க்களை விலைக்கு வாங்கும் பா.ஜ.க.வுக்கு இனியொரு முறை மக்கள் வாய்ப்பை கொடுத்தால் இந்தியாவும் தாங்காது-இந்தியாவிற்காக உருவாக்கப்பட்டுள்ள அரசியல் சட்டமும் தாங்காது.

அரசமைப்புச் சட்டத்தில் உள்ள (சமதர்ம மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு) என்ற சொல்லையேகூட நீக்கி விடும் பேராபத்தில் நாமெல்லாம் இருக்கிறோம். வருகின்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் பா.ஜ.க. அரசால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகளை, தமிழ்நாட்டை-தமிழ்நாட்டு மக்களை ஒன்பது ஆண்டு காலம் புறக்கணித்து ஏமாற்றியதை, அவசர அவசரமாக கொண்டுவரத் துடிக்கும் பொது சிவில் சட்டம் உள்ளிட்ட மக்கள் விரோத சட்ட மசோதாக்களை, கவர்னர்களின் அத்துமீறல்களை, பா.ஜ.க. ஆட்சியில் ஜனநாயகத்திற்கு-மதச்சார்பின்மைக்கு-சமூக நீதிக்கு-அடிப்படை உரிமைகளுக்கு-மாநில உரிமைகளுக்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்தை விளக்கிடும் வகையில், தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் உரக்கக் குரல் எழுப்பி, தமிழ்நாட்டு மக்களுக்காகவும்-இந்தியாவுக்காகவும் செயல்படுவோம்.

இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.