போட்டிக்கு முன்னும், பின்னும் வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் – டு பிளிஸ்சிஸ் கருத்து
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நடைபெறாமல் உள்ளன. ஒவ்வொரு நாடுகளும் மீண்டும் கிரிக்கெட் தொடர்களை தொடங்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவில் அக்டோபர் – நவம்பரில் நடைபெற இருக்கும் ஐசிசி டி20 உலக கோப்பையை வீரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்தியா, வங்காளதேசம், தென்ஆப்பிரிக்கா நாடுகளை விட கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு குறைவாக இருந்த போதிலும், ஆஸ்திரேலியா செப்டம்பர் மாதம் வரை சர்வதேச போக்குவரத்திற்கு (விமான சேவை) தடைவிதித்துள்ளது.
ஒருவேளை தடை நீக்கப்பட்டால் ஆஸ்திரேலியா சென்று விளையாட இந்தியா போன்ற நாடுகள் தயாராக இருக்கின்றன. இந்திய வீரர்கள் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வார்கள் என்று பிசிசிஐ வெளிப்படையாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா சென்று உலக கோப்பை விளையாடுவதற்கு முன் இரண்டு வாரங்களும், விளையாடிய பின்னர் இரண்டு வாரங்களும் வீரர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என தென்ஆப்பிரிக்கா அணியின் மூத்த வீரர் டு பிளிஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டு பிளிஸ்சிஸ் கூறுகையில் ‘‘எனக்கு உறுதியாக தெரியவில்லை, படித்ததில் இருந்து ஏராளமான நாடுகள் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் வரை சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை விதிப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். வங்காளதேசம், இந்தியா, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளை போன்று ஆஸ்திரேலியா பாதிக்கப்படவில்லை என்றாலும், மக்களின் ஆரோக்கியம் குறித்து அவர்கள் கருத்தில் கொள்கிறார்கள்.
ஆனால் உலக கோப்பைக்காக ஆஸ்திரேலியா செல்லும் அணிகள் தொடருக்கு முன் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள முடியும். அதன்பின் தொடர் முடிந்த பிறகும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்திக் கொள்ள முடியும்.
தென்ஆப்பிரிக்கா பயணங்களுக்கான தடையை எப்போது நீக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. நாம் அந்த காலத்தை போன்று படகில் செல்ல முடியாது (நகைச்சுவையாக)’’என்றார்.