Tamilசெய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம்! – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

உலக பிரசித்தி பெற்றது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இங்கு தினமும் வெளிநாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். இதனால் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில், திருப்பதி கோவிலை போன்று பக்தர்களை மகிழ்விக்கும் வகையில் இலவசமாக லட்டு பிரசாதம் வழங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்றன. வேகமாக லட்டு தயாரிக்கும் எந்திரங்கள் வடமாநிலத்தில் இருந்து வாங்கப்பட்டது. இந்த எந்திரம் கோவிலின் தெற்காடிவீதி யானைமகால் அருகே உள்ள இடத்தில் நிறுவப்பட்டு லட்டு தயாரிக்கும் பணிகள் கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒரு மணி நேரத்தில் 2,400 முதல் 3 ஆயிரம் லட்டுகள் வரை தயார் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வருகையை பொறுத்து தினமும் 20 ஆயிரம் லட்டுகள் வரை தயாரிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான நிதி அனைத்தும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் செலவு செய்யப்படுகிறது. பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம் மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று தொடங்கியது.

இந்த திட்டத்தை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டன.

கோவிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற லட்டு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ, எம்.எல். ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, சரவணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் 30 கிராம் எடையளவில் தயாரிக்கப்படுகிறது. இதற்காக 15 பேர் கொண்ட குழுவினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தினமும் மீனாட்சி அம்மனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் இலவச லட்டு பிரசாதம் வினியோகம் செய்யப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்துகண்ணன், இணை ஆணையர் நடராஜன் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *