மயங்க் அகர்வால், ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார் – மகாராஜ் கருத்து
இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 502 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் சேர்த்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா பிலாண்டர், ரபாடா, மகாராஜ், பியெட், முத்துசாமி ஆகிய ஐந்து பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடியும் இந்தியாவின் ரன்னை கட்டுப்படுத்த முடியவில்லை. பந்து வீச்சாளர்களின் திறமை மீது விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 55 ஓவர்களில் 189 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய மகாராஜ், நாங்கள் மோசமாக பந்து வீசவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நாங்கள் மோசமாக பந்து வீசினோம் என்று நான் கூறமாட்டேன். என்னுடைய தனிப்பட்ட கணிப்பு என்னவெனில், யாராவது ஒரு பேட்ஸ்மேன் களம் இறங்கி, பந்து வீச்சாளரின் பந்தை துவம்சம் செய்தால், அவர் வீசிய பந்து மோசமானதல்ல. பந்தை ஆடுகளத்தில் சிறந்த முறையில் ஹிட் செய்தால், அதன்பின் கதை வேறுமானதாக இருக்கும்.
பியெட்டிற்கு அதிர்ஷ்டம் இல்லை. மயங்க் அகர்வால் சூப்பராக விளயாடினார். அதேபோல் ரோகித் சர்மாவும் சிறப்பான ஆடினார். பந்து வீச்சாளர்கள் அவர்களால் என்ன செய்ய முடியுமோ, அதை செய்தார்கள். இது இந்தியாவின் நாளாக அமைந்துள்ளது. நாங்கள் மோசமாக பந்து வீசியதாக நான் பார்க்கவில்லை. முத்துசாமி பேட்டிங் ஆல்-ரவுண்டர். கடினமான கண்டிசனில் அவரது பங்களிப்பு சிறப்பானதே’’ என்றார்.