Tamilசினிமாதிரை விமர்சனம்

மான்ஸ்டர்- திரைப்பட விமர்சனம்

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், நெல்சல் வெங்கடேஷன் இயக்கத்தில் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு ஆகியோரது தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘மான்ஸ்டர்’ எப்படி என்பதை பார்ப்போம்.

வள்ளலாரின் தீவிர பக்தரான எஸ்.ஜே.சூர்யா, எறும்பாக இருந்தாலும் அதையும் ஒரு உயிராக நினைத்து அதை வாழ வைக்க வேண்டும் என்று நினைக்கும் சுபாவம் கொண்டவர். அப்படிப்பட்டவரை ஒரு எலி கொலைக்காரராக மாற்றுகிறது என்றால், அந்த எலியால் அவர் எந்த அளவுக்கு கஷ்ட்டப்பட்டிருப்பார், அப்படி அந்த எலி எப்படி எல்லாம் அவரை கஷ்ட்டப்படுத்தியது, என்பது தான் ‘மாஸ்டர்’ படத்தின் கதை.

மின்சாரத் துறையில் பணியாற்றும் எஸ்.ஜே.சூர்யா, ஆசை ஆசையாக வாங்கும் சொந்த வீட்டில் ஒரு நாள் கூட நிம்மதியாக வாழ முடியாத அளவுக்கு எலி ஒன்று அவரை படாதபாடு படுத்துகிறது. வழக்கமாக எலிகள் கொடுக்கும் தொல்லைகளை தாண்டி, தனது வருங்கால மனைவிக்காக வாங்கி வைத்திருக்கும் விலை உயர்ந்த ஷோபா என அனைத்தையும் அந்த எலி பதம் பார்க்கிறது. எலி தானே என்று பிறர் சாதாரணமாக நினைத்தாலும், அந்த எலி கொடுக்கும் தொல்லையினாலும், அது ஏற்படுத்தும் சேதத்தினாலும், எஸ்.ஜே.சூர்யா மனம் உடைந்து போகிறார். ஒரு கட்டத்தில் எலியை கொலை வெறியோடு துரத்தும் எஸ்.ஜே.சூர்யா, அதே சமயம் அந்த எலியின் மீது இறக்கப்படுகிறார். இதற்கிடையே அதே எலியை கொலை செய்ய சூர்யாவை விட தீவிரம் காட்டுகிறார் படத்தின் வில்லன். அவர் எதற்கு எலியை கொல்ல நினைக்கிறார் என்பதற்கு ஒரு குட்டி கதை இருக்கிறது.

இப்படி எலி பின்னால் இவர்கள் ஓட, அந்த எலியோ அந்த வீட்டை விட்டு போகாமல் அங்கேயே சுற்றி சுற்றி வருகிறது, அதற்கும் ஒரு காரணம் இருக்க, இறுதியில் எலியின் நிலை என்ன ஆனது, எலியால் நொந்து நூடுல்ஸான எஸ்.ஜே.சூர்யாவின் நிலை என்ன ஆனது, இடையில் வந்த வில்லனின் நிலை என்ன ஆனது என்பது தான் ‘மான்ஸ்டர்’ படத்தின் மீதிக்கதை.

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் படங்கள் என்றாலே ஒரு கிளுகிளுப்பு, ஒரு சலசலப்பு இருக்கும். ஆனால், அந்தமாதிரி எதுவும் இல்லாத ஒரு நகைச்சுவைப் படமாக இப்படம் இருக்கிறது. இயக்குநராக தன்னை நீரூபித்த எஸ்.ஜே.சூர்யா நடிகராக நிரூபிக்க பெரும் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இந்த படம் அவரது போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றாலும், அவரை ஒரு நடிகராக ஏற்றுக்கொள்ள வைக்கிறது. பெரிய அளவில் கஷ்ட்டப்பட்டு நடிக்கவில்லை என்றாலும், சாதாரணமான நடிப்பின் மூலமாகவே நம்மை படம் முழுவதும் கவர்ந்துவிடுகிறார். எலி கொடுக்கும் தொல்லையினால் துவண்டு போகிறவர், தனது வருங்கால மனைவிக்காக ஆசை ஆசையாக வாங்கும் பொருட்கள் நாஷமாகிவிட, அந்த சோகத்தை வெளிப்படுத்திய விதத்திலும், மற்றவர்கள் தன்னை கேலி செய்யும் போது அதை இயல்பாக எடுத்துக்கொள்வதும் என்று இயல்பாகவும், அழுத்தமாகவும் நடித்திருக்கிறார்.

படத்தின் ஹீரோ எஸ்.ஜே.சூர்யா என்றால், ஹீரோயினாக எலியை தான் சொல்ல வேண்டும். காரணம், பிரியா பவானி ஷங்கர் எலியை விட குறைவாக தான் வருகிறார். அந்த குறைவான காட்சியிலும் தனது நிறைவான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

அவ்வபோது வரும் கருணாகரனின் டைமிங் ஜோக்குகள் சிரிக்க வைக்கிறது. அதிலும், எஸ்.ஜே.சூர்யா சோகமாக இருக்கும் போதெல்லாம், அவரை கலாய்க்கும் விதத்தில் நக்கல் செய்யும் கருணாகரனின் வசனங்கள், சூர்யாவை கடுப்பாக்கினாலும் நம்மை ஜாலியாக்குகிறது. எஸ்.ஜே.சூர்யாவுக்கு எலி வில்லனாக இருந்தாலும், அந்த எலிக்கு வில்லனாக வரும் நடிகரும் கவனிக்க வைக்கிறார்.

படத்தின் முக்கியமான வேடமான எலி ஒரிஜினலா அல்லது கிராபிக்ஸா என்பதை கண்டுபிடிக்க முடியாத வகையில் இருப்பதே இப்படத்தின் முதல் வெற்றி. எலியால் ஒரு மனிதன் எப்படி எல்லாம் கஷ்ட்டப்படுகிறார், என்பதை இயக்குநர் நெல்சல் வெங்கடேஷன் காமெடியாக சொல்லியிருப்பதோடு, படம் பார்ப்பவர்களுக்கும் அந்த எலி மீது கொலை வெறி ஏற்படும் வகையிலும், “அடப்பாவமே..” என்று எஸ்.ஜே.சூர்யா மீது பரிதாபம் ஏற்படும் விதத்திலும் திரைக்கதையை சுவாரஸ்யமாக அமைத்திருக்கிறார்.

எலியை வைத்து கதை எழுதிய இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன், நாம் சிந்திக்கும்படியான திரைக்கதையை அமைத்திருந்தாலும், படத்தில் வரும் வில்லன், அவர் எலியை கொல்ல நினைப்பது போன்ற விஷயங்கள் சினிமாத்தனமாக இருக்கிறது. இருந்தாலும், அந்த எப்பிசோட்டை அடக்கி வாசித்ததால் பாதிப்பில் இருந்து படம் தப்பித்துவிடுகிறது.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், சண்டைப்பயிற்சியாளர் சுகேஷ், எடிட்டர் வி.ஜே.சாபு ஜோஷப் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் ரொம்பவே கஷ்ட்டப்பட்டிருப்பது படம் முழுவதும் தெரிகிறது. எந்த இடத்திலும் எலி தானே! என்று ரசிகர்கள் அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல், ”ஐயோ எலி என்ன இப்படி செய்கிறதே” என்று எண்ண வைக்கும் அளவுக்கு காட்சிகள் விறுவிறுப்பாகவும், சுவாரஷ்யமாகவும் இருக்க இந்த தொழில்நுட்ப கலைஞர்களின் பணி பலமாக இருக்கிறது. குறிப்பாக சண்டைப்பயிற்சியாளர் சுகேஷின் பணி மிக சிறப்பு.

படத்தின் கதை என்ன என்பது நமக்கு ஆரம்பத்திலேயே தெரிந்தாலும், சில காட்சிகளில் என்ன நடக்கப் போகிறது, என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன், வள்ளலாரின் போதனைகள் மூலம் அனைத்து உயிர்களும் தம்மை போல தான், என்பதை வலியுறுத்தியதோடு, “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன், என்று வள்ளலார் சொல்றாரு, ஆனால் நீங்க என்னான நெல்லை தீயில் போட சொல்கிறீர்களே” என்று ஹோமம் முன்பு பேசும் வசனத்தின் மூலம் கைதட்டல் பெறுகிறார்.

நகைச்சுவை படம் என்றாலும், அதில் மனிதம் பற்றிய சில கருத்துக்களையும் பேசியிருக்கும் இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன், க்ளைமாக்ஸ் காட்சியையும் பாராட்டும்படி வைத்ததோடு, முழு திரைப்படமாக அனைத்து தரப்பினரும் பார்க்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘மான்ஸ்டர்’ குழந்தைகளுக்கான படமாகவும், பெரியவர்களுக்கு கருத்து சொல்லும் ஒரு நாவல் கதையாகவும் இருக்கிறது.

-ஜெ.சுகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *