Tamilசெய்திகள்

வினாத்தாள் கசிந்த விவகாரம் – குற்றவியல் நடவடிக்கை எடுப்பதாக எச்சரிக்கை

கொரோனா பரவலுக்கு இடையே பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால் அதற்காக மாணவர்களை தயார்படுத்தும் நிலையில் ஆசிரியர்கள் கற்றல் பணியை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு கடந்த 9-ந் தேதி தொடங்கியது. காலையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மதியம் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

பொதுத்தேர்வை எப்படி சந்திப்பது என்ற அடிப்படையில் இந்த திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி அளிக்கப்பட்டு வந்ததால் இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வை நடத்துவதற்கு அரசு தேர்வுத்துறை தயாராகி வருகிறது.

இந்தநிலையில் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்ததால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் கணிதப் பாடத்தேர்வுகள் நேற்று நடைபெற்றன.

ஆனால் இந்த பாடங்களுக்கான வினாத்தாள் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) காலையிலேயே சமூக ஊடகங்களில் வெளியானது. அதேபோல நேற்று பிற்பகல் நடந்த பிளஸ் 2 மாணவர்களுக்கான வணிகவியல் தேர்வு வினாத்தாளும் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியானது.

தேர்வுகள் நடைபெறுவதற்கு முன்னதாகவே வினாத்தாள் எப்படி வெளியானது? என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். போளூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியிலும், வந்தவாசி தனியார் பள்ளியிலும் இருந்து வினாத்தாள் வெளியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

இதை தொடர்ந்து அந்த 2 பள்ளிகளிலும் கல்வித்துறை அதிகாரி நேற்று விசாரணை நடத்தினார். இதற்கிடையில் பிளஸ்-2 வணிக கணிதம் தேர்வுக்கான வினாத்தாள் இன்று அதிகாலை வெளியானது.

இத்தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் சூழ்நிலையில் மீண்டும் வினாத்தாள் கசிந்து இருப்பது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கல்வி அதிகாரி விசாரணையை முடித்து அதன் அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை ஆணையரிடம் சமர்ப்பிக்க இருக்கும் நிலையில் வினாத்தாள் வெளியாகி இருப்பது நிர்வாக செயல்பாட்டை சீர்குலைக்கும் செயலாக அமைந்துள்ளது.

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இத்துறையை படிப்படியாக மேம்படுத்தி வரும் நிலையில் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வினாத்தாள் வெளியாவதற்கு உடந்தையாக இருந்தது யார், யார்? அரசு தேர்வுத்துறை ஊழியர்களின் குறைபாடா? அல்லது கல்வித்துறை அலுவலர்களின் உதவியோடு இந்த சம்பவம் நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

விசாரணையின் இறுதியில் இது தொடர்புடைய ஊழியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எப்படி நடைபெறுமோ அதேபோன்று இந்த திருப்புதல் தேர்வையும் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒவ்வொரு நாளும் தேர்வு நடைபெறும் அன்று காலையில் தான் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படும்.

ஆனால் முன்கூட்டியே எப்படி வெளியானது என்பது கேள்விக்குறியாக உள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு மையங்கள், தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வையில் இயங்குகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 50-க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு மையங்கள் செயல்படுகின்றன. அங்கிருந்து தான் அருகில் உள்ள பள்ளிகளுக்கு வினாத்தாள்கள் வினியோகிக்கப்படும்.

திருப்புதல் தேர்வுகளை பொறுத்தவரையில் இனி வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு முன்கூட்டியே அனுப்பப்படமாட்டாது. தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்புதான் அனுப்பப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்தால் பொதுத்தேர்வை நடத்த இயலாத நிலை ஏற்படும் பட்சத்தில், திருப்புதல் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் இத்தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகக் கருதி ஒரு சிலர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.