Tamilசெய்திகள்

சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் சேர்வது பற்றி இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை – சரத்குமார் அறிவிப்பு

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சமத்துவ மக்கள் கட்சியின் ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கும் ஒரு டைரி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு மண்டே பெட்டிஷன் உள்பட பல்வேறு வழிகளில் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த பணிகளில் அவர்கள் ஈடுபடுவார்கள்.

கூட்டணியில் சேர்வது பற்றி இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. அ.தி.மு.க.வுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. பா.ஜனதாவை சேர்ந்தவர்களும் என்னிடம் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியா? அல்லது பா.ஜனதா கூட்டணியா? என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன்.

இந்த கூட்டணி முடிவு 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு முடிவு எடுக்கப்படும். நெல்லையில் நடந்த கூட்டத்தில் நான் போட்டியிட வேண்டும் என கட்சி தொண்டர்கள் வலியுறுத்தினர். நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு எனக்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி ஒரு வாரத்தில் தெரிவிப்பேன். அதுவரை காத்திருக்க வேண்டும். வருகிற தேர்தலில் பண நாயகத்துக்கு அடிபணியாமல் ஜனநாயகத்திற்கு அடிய பணிய வேண்டும். சபாநாயகர் சட்ட மன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் போல் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் சபாநாயகர் போல் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.