வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய குழுவினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிச்சாங் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் கடந்த 2 நாட்களாக பார்வையிட்டனர்.
இந்த குழுவில் இடம் பெற்றிருந்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (என்.டி.எம்.ஏ.) ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் சார்பில் திமான் சிங், வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறை இணை இயக்குனர் ஏ.கே.சிவ்ஹரே, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விஜயகுமார், நிதித்துறை சார்பில் ரங்கநாத் ஆடம், மின்சாரத்துறை சார்பில் இயக்குனர் பவ்யா பாண்டே ஆகிய 6 பேர் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் கடந்த 11-ந்தேதி தலைமைச் செயலாளர் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகளை சந்தித்து விட்டு அதன் பிறகு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு வந்தனர். அவர்களுடன் சென்னை மாநகராட்சி அதிகாரி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் சில இடங்களுக்கு உடன் சென்று பாதித்த விவரங்களை எடுத்துக் கூறினார்கள். இதே போல் மற்ற மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கலெக்டர்கள் உடன் சென்று சேத விவரங்களை எடுத்து கூறினார்கள்.
அதன் அடிப்படையில் மத்திய குழுவினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்பட்டுள்ள சேத விவரங்களை கணக்கெடுத்துள்ளனர். 4 மாவட்டங்களிலும் வெள்ளச் சேதத்தை பார்வையிட்டு மத்திய குழுவினர் இன்று தலைமைச் செயலகத்திற்கு சென்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மத்திய குழுவினர் சென்று சந்தித்தனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யாத்ரி தலைமையில் குழுவில் உள்ள அனைவரும் முதலமைச்சரை சந்தித்தனர். அவர்களுடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பொதுத்துறை செயலாளர் முருகானந்தம் ஆகியோரும் உடன் இருந்தனர்.
அப்போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் ஏற்பட்டிருந்த வெள்ள சேதம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக எடுத்துக் கூறினார். அப்போது இடைக்கால நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.5060 கோடி கேட்டிருந்ததைவிட இப்போது சேத மதிப்பு அதிகமாக உள்ளதால் கூடுதலாக நிவாரண உதவி தேவைப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
புயல் பாதிப்பு தொடர்பாகவும் நிதி ஒதுக்கீட்டிற்கான கோரிக்கை மனுவினையும் மத்திய குழுவின் தலைவரான குணால் சத்யாத்ரியிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய சேதத்தை சரி செய்து மீண்டு உருவாக்கவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு அதனை மீண்டும் உருவாக்கி வழங்கிடவும் தமிழ்நாடு அரசின் நிதி ஆதாரம் மட்டும் போதுமானதல்ல. மத்திய அரசு பங்களிப்பும் பெருமளவு பெருமளவு தேவைப்படுகிறது.
எனவே மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்களை மீட்க தேவையான உதவிகளை வழங்கவும் பல்வேறு வகையான சமூக கட்டமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்யவும், மத்திய அரசுக்கு நீங்கள் உரிய பரிந்துரை செய்து தமிழ்நாடு அரசு கோரி உள்ள தொகையை பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதற்கு மத்திய குழுவினர், கண்டிப்பாக தமிழகத்திற்கு தேவையான உதவிகளை பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர்.