ஹம்ஸா பின்லேடன் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்தார் – டொனால்ட் டிரம்ப்
அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார்.
பின்லேடனுக்கு பின்னர் அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான ஹம்ஸா பின்லேடனை 2017ல் சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்தது. அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி இருப்பதாகவும், ஈரானில் வீட்டுக் காவலில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியானது. ஹம்ஸா பின்லேடன் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.7 கோடி பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது.
இதற்கிடையே, ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா அரசின் உளவுத்துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
இந்நிலையில், ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கினார் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமெரிக்காவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வந்தவர் ஹம்ஸா பின்லேடன். அவர் அமெரிக்காவை பற்றி தொடர்ந்து மிக கீழ்த்தரமாக விமர்சித்து வந்தார் என தெரிவித்துள்ளார்.