Tamilசெய்திகள்

அடுத்தடுத்து 8 பேருந்துகள் எரிந்ததால் ஜார்கண்டில் பரபரப்பு

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள கட்கர்கா பகுதியில் தனியார் பஸ் நிறுத்துமிடம் உள்ளது. தொலைதூரங்களுக்குச் செல்லும் 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இங்கு நிறுத்தப்பட்டு வருகின்றன. இங்கு நிறுத்தப்பட்டிருந்த சில பஸ்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதில் 4 பஸ்கள் முற்றிலும் சேதமடைந்தன. மற்றொரு பஸ் பாதியளவு சேதம் அடைந்தது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சுமார் 100 மீ. தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் 4 பஸ்கள் சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தன. இதில் அந்த பஸ்கள் முற்றிலும் நாசமாயின. தகவலறிந்து அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து 4 வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

பஸ்கள் தீப்பிடித்தபோது அவற்றில் பயணிகள் யாரும் இல்லாததால் இச்சம்பவத்தில் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. 8 பஸ்கள் முற்றிலும் தீக்கிரையான சம்பவம் ராஞ்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தின் பின்னணியில் சதி இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.