Tamilசெய்திகள்

அதிமுகவுக்கும், அண்ணாமலைக்கும் எந்த தகராறும் இல்லை – எடப்பாடி பழனிசாமி பேச்சு

அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, முதல் முறையாக நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் உள்துறை மந்திரி அமித் ஷாவை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவின் முக்கிய தலைவர்களான ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வாகி இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளார்.

டெல்லியில் அமித் ஷாவுடனான சந்திப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.க. தலைவர்களும் நேற்று இரவு டெல்லியில் தங்கிய நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

உள்துறை அமைச்சர், ஜே.பி.நட்டா ஆகியோரை சம்பிரதாய அடிப்படையில் சந்தித்து பேசினோம். முந்தைய பாராளுமன்ற தேர்தலில் இருந்து தற்போது வரை அதிமுக- பாஜக கூட்டணி தொடர்கிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் எந்த தகராறும் இல்லை.

அந்தந்த கட்சிக்கு என்று தனிக் கொள்கை உள்ளது. கொள்கை அடிப்படையில் அந்தந்த கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. திமுக அரசு மீதான தவறுகளை அதன் கூட்டணியில் கட்சிகள் சுட்டிக்காட்டுவதில்லை. அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு, பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. நிதியமைச்சர் ஆடியோ விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.