Tamilசெய்திகள்

அமெரிக்காவை மதிப்புடன் பார்த்தவர்கள் இன்று கேலிப்பொருளாக பார்க்கிறார்கள் – டொனால்ட் டிரம்ப்

இவ்வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்பொதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் ஒருவரையொருவர் எதிர்த்து களம் இறங்கியுள்ளனர்.

நாட்டின் முன் நிற்கும் சவால்கள் மற்றும் அவற்றிற்கு தாங்கள் பரிந்துரைக்கும் தீர்வுகள் குறித்து இருவரும் பல மாநிலங்களில் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர். 2018ல், தனது பதவிக்காலத்தில் டொனால்ட் டிரம்ப், சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதியை விதித்தார்.

இதற்கு பதிலடியாக சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவிலிருந்து தங்கள் நாட்டில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி விதித்தார். உலக வர்த்தகத்தில் மிக பெரும் பொருளாதாரங்களான அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நிலவிய வரிவிதிப்பு போட்டியால் இரு நாட்டு உறவில் சிக்கல் நிலவியது.

இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் பிரசாரத்தின் போது அவரிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீன வர்த்தகம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது டிரம்ப் பதிலளித்ததாவது:

தேவைப்பட்டால், அமெரிக்காவிற்கு சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை எனக்கு பிடிக்கும். எனது பதவிக்காலத்தின் போது அவர் எனக்கு நல்ல நண்பராகத்தான் இருந்தார். அவருடன் என்னால் இணைந்து செயல்பட முடிந்தது. ஆனால், சீனாவிற்கு எதிராக நான் எடுத்த சில முடிவுகளை அவர் விரும்பியிருக்க வாய்ப்பில்லை.

3 வருடங்களுக்கு முன்பு வரை, அயல்நாட்டு தலைவர்கள், நம் நாட்டை மிகவும் மதிப்புடன் பார்த்தார்கள். ஆனால், இன்று (பைடன் ஆட்சிக்காலத்தில்) நமது நாட்டை ஒரு கேலிப்பொருளாக எண்ணுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தனது பிரசாரங்களின் போது, தற்போது சீனாவிற்கு “அதிக முன்னுரிமை தரப்படும் நாடு” (most favored nation) எனும் அந்தஸ்து தரப்படுவதை, திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.