Tamilசெய்திகள்

அமைச்சர் அமித்ஷாவை திடீரென்று சந்தித்த ஆளுநர் தமிழிசை

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். 15 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. தெலுங்கானா சட்டசபையில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான ஆட்சேர்ப்பு மற்றும் பல்கலைக்கழகங்களில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதை கருத்தில் கொண்டு ஆட்சேர்ப்பு வாரியம் குறித்த மசோதா உருவாக்கப்பட்டது. இதற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சில ஆட்சேபனைகள் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மசோதாக்கள் இன்னும் கவர்னர் ஒப்புதலைப் பெறவில்லை.

ஆட்சேர்ப்பு வாரியத்தின் மசோதா ஏற்கத்தக்கதா என்பதை தெளிவுபடுத்துவதற்காக, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில கல்வி அமைச்சர் பி.சபிதா இந்திரா ரெட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளார். வாரியத்தின் ஆட்சேர்ப்பு ஏற்கத்தக்கதா என்பதை பல்கலைக்கழக யுஜிசியிடம் கேட்டறிந்தார். பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பதாம் பலமுறை அறிவுறுத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை என அவர் வேதனை தெரிவித்தார்.

விதி நிலை குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் தனி கடிதம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷாவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசியது தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த சந்திப்பு வழக்கமான சந்திப்பு தான் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.