Tamilசெய்திகள்

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை – மகிந்த ராஜபக்சே அறிவிப்பு

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி அந்நாட்டையே ஒரு புரட்டு புரட்டி போட்டு உள்ளது. வரலாறு காணாத வகையில் அத்யாவசிய பொருட்களின் விலை அனைத்தும் உயர்ந்து விட்டதால் பொதுமக்கள் இன்னும் தவியாய் தவித்து வருகின்றனர். அங்கு வாழ வழி தெரியாமல் பல குடும்பங்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் வெகுண்டு எழுந்ததால் அங்கு அரசியல் மாற்றமும் ஏற்பட்டது. அதிபராக இருந்த கோத்தபய ராஜபச்சே சொந்த நாட்டைவிட்டு ஓடி விட்டார். அவர் தற்போது தாய்லாந்து நாட்டில் அடைக்கலம் புகுந்துள்ளார்.

பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவர் வெளிநாட்டுக்கு செல்ல அங்குள்ள கோர்ட்டு தடை விதித்து உள்ளது. இதனால் அவர் எங்கும் தப்பி செல்ல முடியாமல் இலங்கையிலேயே முடங்கி கிடக்கிறார் பொதுமக்கள் தொடர்ந்து ராஜபச்சே குடும்பத்தினர் மீது கோபமாக இருப்பதால் மகிந்த ராஜபக்சே அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவார் என்ற பேச்சு அடிபட்டது.

இதனை அவர் மறுத்து உள்ளார். இதுதொடர்பாக மகிந்த ராஜபக்சே அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:- அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது இல்லை. நான் தொடர்ந்து அரசியலில் இருப்பேன். நேரம் வரும் போது மட்டுமே ஓய்வு பெறுவேன். அதுவரை நான் அரசியலில் இருப்பேன்.

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவை வழி நடத்துவதற்கு நான் தேவையா என்பதை கட்சி தான் தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் நான் ஒரு வக்கீல் என்னால் கோர்ட்டில் வாதாட முடியும். தேவைப்பட்டால் நான் கோர்ட்டுக்கு செல்லவும் தயார்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.