Tamilவிளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது.

சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று பலப்பரீட்சையில் நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இந்த ஜோடி முறையே 56 மற்றும் 58 ரன்களை குவித்து அசத்தினர். அடுத்து வந்த விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. இடையில் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு, பிறகு இன்று மதியம் துவங்கியது.

இன்றைய ஆட்டத்திலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஜோடி சதம் அடித்து அசத்தியது. இதன் காரணமாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 356 ரன்களை குவித்தது. இந்திய சார்பில் விராட் கோலி 122 ரன்களையும், கே.எல். ராகுல் 111 ரன்களையும் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் அஃப்ரிடி மற்றும் ஷதாப் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாட தொடங்கியது. இதில், பக்கார் ஜமான் 27 ரன்கள், அகா சல்மான் மற்றும் இஃப்திகார் அகமது ஆகியோர் தலா 23 ரன்களும், பாபர் அசாம் 10 ரன்களும், இமாம் உல் ஹாக் 9 ரன்களும், ஷாஹீன் ஷாஹ் அஃப்ரிதி 7 ரன்களும், ஷாதாப் கான் 6 ரன்களும், ஃபஹீம் அஷ்ரப் 4 ரன்களும், முகமது ரிஸ்வான் 2 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டால், பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.