Tamilசெய்திகள்

ஆதித்யா-எல்1 விண்கலம் விரைவில் விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ தலைவர் அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட பின்னர், கட்டுப்பாட்டு அறையில் இருந்து விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் பேசியதாவது:-

சிங்கப்பூருக்காக இஸ்ரோ மேற்கொள்ளும் பிரத்யேக ஏவுதல் இதுவாகும். சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த செயற்கைகோள்களை மட்டும் விண்ணுக்கு அனுப்ப மேலும் 4 ராக்கெட்டுகளை தயாரிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இது சிங்கப்பூர் நாட்டினருக்கு பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் மீதான நம்பகத் தன்மையைக் காட்டுகிறது. எங்களுக்கு விண்வெளியில் சரியான சுற்றுப்பாதை சாதனையாக உள்ளது.

இந்த பயணத்தின் மூலம் விண்வெளி குப்பைகளை குறைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. ராக்கெட்டின் 4-வது நிலை பாதுகாப்பான முறையில் விண்வெளி கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காக கீழ் சுற்றுப்பாதைக்கு கொண்டு வரப்படும்.

4-வது நிலை 535 கி.மீ. முதல் 300 கி.மீ. சுற்றுப்பாதைக்கு கொண்டு வரப்படும். விண்வெளிக் குப்பைகள் அபாயத்தைக் குறைக்க இஸ்ரோ பயனுள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அடுத்த ஏவுதல் பி.எஸ்.எல்.வி. சி-57 ஆதித்யா-எல்1 ஆகஸ்டு இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது.

தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து ககன்யான் விண்கலம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆள் இல்லாத விண்கலம் விண்ணில் செலுத்தி சோதனை இடப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

திட்ட இயக்குனர் பிஜூ கூறுகையில், ‘பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த செயற்கைகோள்கள் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவற்றின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 530- 570 கி.மீ. உயரம் வரையான சுற்று வட்டப் பாதையில் அதிக அளவிலான செயற்கைகோள்கள் மற்றும் விண்வெளி கழிவுகள் உள்ளன. எனவே 350 கி.மீ. புவி தாழ்வட்ட பாதையில் செயற்கைகோள்களை நிலை நிறுத்துவது குறித்து பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்டில் உள்ள பி.எஸ்-4 (4-வது நிலை) மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது’ என்றார்.