Tamilசெய்திகள்

வைகுண்ட ஏகாதசியன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு தரிசனக் கட்டணம் முழுமையாக ரத்து – அமைச்சர் பி.கே.சேகர் பாபு தகவல்

அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (திங்கட்கிழமை), வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மின்சார வாரியம், சென்னை குடிநீர் வாரியம், தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பி.கே. சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வைணவ கோவில்களிலும் வருகிற 23-ந்தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில் கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்கு சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக சுவாமி தரிசனம் மேற்கொண்டார்கள். இந்தாண்டு கூடுதலாக 20 சதவீத பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு வைகுண்ட ஏகாதசிக்கு செய்ய வேண்டிய முன் ஏற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போன்றவற்றை செய்து தருவதற்காக ஆலோசனை செய்து இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டோம்.

வைகுண்ட ஏகாதசி அன்று கோவிலுக்கு கிழக்கு கோபுர வாசல் வழியாக பொது தரிசனமும், மேற்கு கோபுர வாசல் வழியாக சொர்க்க வாசல் சேவைக்கு வருபவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது நிரம்பிய முதியோர்களும் அனுமதிக்கப்படுவார்கள். டி.பி. கோவில் தெரு வழியாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது நிரம்பிய முதியோர்களும் அனுமதிக்கப்படுவார்கள். டி.பி. கோவில் தெரு வழியாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயது நிரம்பிய முதியோர்களுக்கு தனி வரிசை இந்தாண்டு புதிதாக ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சொர்க்க வாசல் திறப்புக்கு அதிகாலை 2.30 மணிக்கு 1,500 பக்தர்கள் அனுமதிப்பது என்றும், உபயதாரர்கள், கட்டளைதாரர்கள் 850 நபர்கள் அனுமதிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கின்றது. அதன் பிறகு காலை 6 மணி முதல் இரவு நடை மூடுகின்ற வரையில் பொது தரிசனம் தான் இந்த ஆண்டு கடைபிடிக்கப்பட இருக்கின்றது. அன்றைய தினம் சிறப்பு தரிசனக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றது.

கோவிலில் அன்றைய தினம் கூடுகின்ற பக்தர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்படும் நிலையில் உரிய சிகிச்சை அளிப்பதற்காக கோவிலுக்கு உள்ளேயும், வெளியிலும் 6 சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் தற்காலிக கழிவறைகள் 20 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட இருக்கின்றது. காவல்துறையின் சார்பில் 2 துணை ஆணையர்கள் தலைமையில் 3 ஷிப்ட்களாக, 18 உதவி ஆணையர்கள், 54 காவல் ஆய்வாளர்கள், 400-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எந்நேரமும் தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசர கால ஊர்திகள் நிறுத்தப்பட இருக்கின்றன.

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 2 கூடுதல் ஆணையர்கள், 6 இணை ஆணையர்கள், 4 துணை ஆணையர்கள், 6 உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் என 150 அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஆகவே இந்த ஆண்டு, கடந்தாண்டை விட அதிகமான அளவிற்கு பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்வதற்கும், காலை 6 மணி முதல் இரவு நடை மூடுகின்ற வரை பொது தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிதம்பரம் நடராஜர் கோவிலை பொறுத்தளவில் ஏற்கனவே தீட்சிதர்கள் ஐகோர்ட்டில் கனக சபை தரிசனத்திற்கு தடை கோரி மனு செய்திருந்தார்கள். ஐகோர்ட்டு நீதிபதிகள் அதற்கு தடை விதிக்கவில்லை, வழக்கு தான் நிலுவையில் இருக்கின்றது. ஆகவே விசேஷ நாட்களில் கனக சபையின் மீதேறுவதில் அசவுகரியம் இருந்தால் அது தவிர்க்கப்பட வேண்டும் என்பதில் இந்து சமய அறநிலையத்துறைக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதையே காரணம் காட்டி கனகசபை மீதேறி தரிசனம் செய்வதற்கு தடை செய்வதை இந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்காது. கோவில்களில் படிப்படியாக சிறப்பு தரிசனக் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணமும், இந்து சமய அறநிலையத்துறையின் எண்ணமும் ஆகும். கோவிலில் அனைவரும் சமமாக செல்வதற்காகவும், சிறப்பு தரிசனம் என்று வருகின்றபோது பொது வரிசையில் வருபவர்களுக்கு தரிசனத்திற்கு தாமதம் ஏற்படுவதாலும் விரைவாக தரிசனம் நடைபெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்திற்காகவும் இந்த சிறப்பு தரிசனக் கட்டணத்தை திருவிழா காலங்களில் ரத்து செய்வதென்று முடிவெடுத்தோம்.

திருவண்ணாமலையில் கூட பவுர்ணமி தினத்தன்று சிறப்பு தரிசனம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டிருக் கின்றது. கடந்த நான்கு மாதங்களாக பவுர்ணமி தினங்களில் அனைவரும் பொது தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்ற சூழல் தவிர்க்கப்பட்டு விரைவாக சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக இருப்பதால் இதனை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இந்த ஆண்டு பார்த்தசாரதி கோவில் சிறப்பு தரிசனக் கட்டணத்தை ரத்து செய்கிறோம். மேலும், எங்கெல்லாம் இதுபோன்ற சாத்தியக் கூறுகள் இருக்கின்றதோ அந்தந்த கோவில்களில் விழா காலங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து சிறப்பு தரிசனத்தை படிப்படியாக ரத்து செய்வதற்கு துறை முயற்சிக்கும். பக்தர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது தான் இந்த அரசின் கடமையாகும். கடந்தாண்டை போலவே இந்தாண்டும் பார்த்தசாரதி கோவிலில் மார்கழி மாதத்தில் இசைக் கல்லூரி மாணவ, மாணவிகளின் திருப்பாவை பாசுரம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.