Tamilசினிமா

ஆந்திராவில் பா.ஜ.க-வை பலப்படுத்துவேன் – என்.டி.ஆர் மகள் புரந்தேஸ்வரி பேட்டி

ஆந்திரா மாநில முன்னாள் முதல்-அமைச்சர் நடிகர் என்.டி.ராமராவின் மகள் புரந்தேஸ்வரி பா.ஜ.க.வின் புதிய மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்று முதன் முதலாக விஜயவாடா வந்தார். அவருக்கு வழி நெடுகிலும் பா.ஜ.க.வினர் பூக்களை தூவி வரவேற்றனர்.அப்போது அவர் கூறியதாவது:-

ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சி மேலிட உயர்நிலைக் குழு கவனித்துக் கொள்ளும். ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்துவேன்.தற்போது பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளது. எதிர்காலத்திலும் அவர்களுடன் கூட்டணி தொடரும்.

ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க வாக்குகளை பொருட்படுத்தாமல் உதவி செய்து வருகிறது. மத்திய அரசு வீட்டு வசதி திட்டங்களுக்காக கடந்த 9 ஆண்டுகளில் ஆந்திர மாநிலத்திற்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இதில் குறைந்தபட்சம் 65 சதவீதம் வீடுகள் தற்போது கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 35 சதவீத குடியிருப்புகள் கூட தயாராக இல்லை.

ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியின் காரணமாக மாநிலத்தில் சாலைகள் மோசமாக உள்ளன. தேசிய திட்டமான போலவரம் பாசன திட்டத்தின் பணிகள் மெதுவாக நடக்கிறது. ஜெகன் மோகன் ரெட்டி அரசு திட்டமிட்டபடி அதனை முடிக்க முடியாவிட்டால் அதன் கட்டுமானத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க மறைமுக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவியின் சகோதரியான புரந்தேஸ்வரி தெலுங்கு தேசம் கட்சி குறித்து எதுவும் பேசாதது அந்த கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.